யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் புகைப்படம், 21 நவம்பர் 1967 அன்று ஆபர்னில் உள்ள ராசன் ஹோட்டலில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு “Getty Images” தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நடுவில் இருப்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அல்ல. வேறொரு பெண்ணின் புகைப்படத்தை, சோனியா காந்தி பாரில் நடனமாடிய போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
அரசியல் கட்சித் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் ஆபாசமாகத் தாக்கி பேசும் பழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி மது விடுதியில் வேலை பார்த்தார் என்றும், மது விடுதியில் நடனமாடும் வேலையை செய்தார் என்றும் புகைப்படம் ஒன்றை பாஜகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தில் getty images லோகோ இருந்ததை பார்க்கமுடிந்தது. இதையடுத்து getty images இணையதளத்திற்குச் சென்று புகைப்படத்தை தேடினோம். அப்போது அங்கு பரவி வரும் புகைப்படம் இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் இந்த புகைப்படம் 1967ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி அமெரிக்காவின் Auburn என்ற இடத்தில் உள்ள ராசன் ஹோட்டலில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் உறுதிச் செய்ய தேடிய போது, I Grew Up in Mortdale 2223 என்ற பேஸ்புக் பக்கத்தில் நவம்பர் 17, 2025 அன்று பரவி வரும் புகைப்படம் பதிவாகியிருந்தது பார்க்கமுடிந்தது. அதில் 1967 நவம்பர் 17 அன்று, சிட்னியில் 2000க்கும் மேற்பட்ட மதுபான ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம், 14 நாட்கள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது. அப்போது கோ-கோ நடனக் கலைஞர்களின் குழு ஆபர்னில் உள்ள ராசன் ஹோட்டலில் கொண்டாடினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை மேலும் உறுதிச் செய்ய பரவி வரும் புகைப்படத்தில் சோனியா காந்தி என்று கூறும் புகைப்படத்தையும், உண்மையான சோனியா காந்தி புகைப்படத்தையும் Face Comparison Checker மூலம் ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இரு புகைப்படங்களும் வெவ்வேறு புகைப்படங்கள் என்பது உறுதியானது.

முடிவு:
நம் தேடலில், பரவி வரும் புகைப்படம், 21 நவம்பர் 1967 அன்று ஆபர்னில் உள்ள ராசன் ஹோட்டலில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு “Getty Images” தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நடுவில் இருப்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அல்ல.
