யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சீனாவின் சோக்கிங் பகுதியில் கடந்த ஏப்ரல் 19, 2025 அன்று டிரோன் லைட் ஷோ நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. உண்மையான புகைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும், ‘MODI WELCOME TO CHINA’ என்ற வாசகமும் இடம்பெறவில்லை.
பரவிய செய்தி
நமது பிரதமர் மாண்புமிகு. மோடி ஜி அவர்களுக்கு இன்று சீனா வழங்கிய வரவேற்பு கண்கொள்ளா காட்சியில் இதுவும் ஒன்று. இங்கு வயிறு மற்றும் ................. ஏதாவது சரியில்லாதவர்கள் இதை பார்த்து தணித்து சரிசெய்து கொள்ளலாம்

விரிவான விளக்கம்
சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டின் அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் தனித்தனி பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில் சீனா சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும், MODI WELCOME TO CHINA என்று வானில் ஒளி நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சீனா மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறது pic.twitter.com/FqCONNZPK6
உண்மை என்ன?
பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது Global Times என்ற சீன ஊடகத்தில், ஏப்ரல் 21 அன்று வெளியான சில புகைப்படங்கள் காணமுடிந்தது. அதில் பரவி வரும் புகைப்படம், 4வது புகைப்படமாக இடம்பெற்றிருந்தது. அந்த செய்தியில், சீனாவின் Chongqing நகரில் 15 நிமிட ட்ரோன் ஒளி நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், இந்த லைட் ஷோ வானத்தை ஒளிர செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, People's Daily, China என்ற ஊடகத்திலும் ஏப்ரல் 21, 2025 அன்று டிரோன் லைட் ஷோ நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று, பரவி வரும் புகைப்படம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும், ‘MODI WELCOME TO CHINA’ என்ற வாசகமும் இடம்பெறவில்லை.
எனவே சீனாவில் நடைபெற்ற லைட் ஷோ புகைப்படத்தில், MODI WELCOME TO CHINA என்று குறிப்பிட்டு அவரின் புகைப்படத்தை எடிட் செய்து பரப்புவது உறுதியானது.

முடிவு:
நம் தேடலில், சீனாவின் சோக்கிங் பகுதியில் டிரோன் லைட் ஷோ நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பது தெரியவந்தது. அதில் புகைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும், ‘MODI WELCOME TO CHINA’ என்ற வாசகமும் இடம்பெறவில்லை. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.