யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண்டது. இந்நிலையில் பேனா வடிவிலான அந்த அலங்கார ஊர்தியை, “மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை தற்போது அகற்றப்படும் காட்சி” என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் 134 அடி உயரத்தில் பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக வைக்க இடமின்றி அலைக்கழிக்கப்படுவதாக கூறி சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
மெரினாவில் வைக்க இருந்த பேனா சிலை
ஆட்சி மாற்றதால் இடம் தேடும் திமுக 🤣 pic.twitter.com/jsPjxj2oGz
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது தந்தி டிவி ஊடகத்தின் யுட்யூப் பக்கத்தில் “கன்னியாகுமரி முதல் சென்னை வரை முத்தமிழ் தேர் பவனி - 4 அமைச்சர்கள் பங்கேற்பு” என்ற தலைப்பில் நவம்பர் 05, 2023 அன்று பரவி வரும் புகைப்படத்தில் உள்ள காட்சி உடன் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர்” என்ற அலங்கார ஊர்தி பயணம் மேற்கொண்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, இந்து தமிழ் திசை ஊடகத்திலும் ஜூன் 15, 2023 அன்று, “கருணாநிதி நூற்றாண்டு விழா | 30 மாவட்டங்களில் பயணிக்கும் முத்தமிழ் தேர்: கன்னியாகுமரியில் 4 அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருக்கும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் புறப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, பரவி வரும் வீடியோவில் இருப்பது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணம் செய்த பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி”. இதை மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை என்று குறிப்பிட்டு தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
