யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. கடந்த 2023-ல் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக ஞானேஷ் குமார் இருந்தபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, அவர் அமித்ஷா காலில் விழுந்து வணக்குவது போல எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
பீகார் தேர்தல் முடிவுகள் பற்றி விளக்கம் வேண்டுபவர்களுக்கு இந்த வீடியோவை பார்த்தால் அங்கு என்ன நடந்தது என்று புரியும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தலைமை தேர்தல் அதிகாரி ஞாணேஷ் குமார் மண்டியிடும் வீடியோ...
இவனெல்லாம் அதிகாரியாம்
இந்த நாடு உருப்பட்ட மாதிரிதான்

விரிவான விளக்கம்
பீகார் சட்டமன்றத் தேர்தலானது கடந்த நவம்பர் 6 ஆம் தேதி மற்றும் நவம்பர் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 243 சட்டமன்றத் தொகுதிகளில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலில் விழுந்து தலைமை தேர்தல் அதிகாரி ஞாணேஷ் குமார் வணங்குவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது contentgarden. in என்ற பக்கத்தில் ”Union Home Minister Amit Shah being felicitated by Gyanesh Kumar” என்ற தலைப்பில் வெளியான செய்தியில், பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படம் இருந்ததை காணமுடிந்தது. அதில் புது டெல்லியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் ஏற்பாடு செய்த கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆர்கானிக் பொருட்களை ஊக்குவித்தல் குறித்த தேசிய கருத்தரங்கின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் ஞானேஷ் குமார் பாராட்டுகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து தேடிப் பார்த்த போது, நவம்பர் 8, 2023 அன்று Press Information Bureau வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் புது டெல்லியில் தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (NCOL) ஏற்பாடு செய்திருந்த 'கூட்டுறவுகள் மூலம் ஆர்கானிக் பொருட்களை ஊக்குவித்தல்' என்ற தேசிய கருத்தரங்கில் ஒன்றிய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா தலைமை விருந்தினராக உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த செய்தி குறிப்பில் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ஞானேஷ் குமார் இடம்பெற்றிருந்த புகைப்படங்களை பார்க்கமுடிந்தது.

எனவே பரவி வருவது கடந்த 2023-ல் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெளிவானது.
இதையடுத்து பரவி வரும் வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து, Sight Engine இணையதளப்பக்கத்தில் இது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பரவி வரும் வீடியோ 82% AI மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.

முடிவு:
நம் தேடலில், பரவி வரும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. மேலும் 2023-ல் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக ஞானேஷ் குமார் இருந்தபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, அவர் அமித்ஷா காலில் விழுந்து வணக்குவது போல எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.