’சிவசக்தி’ புள்ளி என்ற பெயருக்கு அடிப்படையானது இந்து மதமா? இந்திய தத்துவமா?
’சிவசக்தி’ என்பது ’இயற்கையின் இருமை’ என்று இந்திய தத்துவத்தில் பொருள்படுவதாக சொல்லிதான் ‘IAU'-விடம் இந்த பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்து கடவுள்கள் என்ற அடிப்படையில் அல்ல.
கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று, ஆடி திருவாதிரை மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அதில் பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய இடத்திற்கு ’சிவசக்தி புள்ளி’ என பெயரிட்டுள்ளோம். பூமியைத் தாண்டி சிவனின் பெயர் புகழ்பெற்றுள்ளது” என்றார்.

அதாவது, இந்துக் கடவுளர்களின் பெயர்களான சிவன் சக்தி ஆகியோரின் பெருமையை பூமியைத் தாண்டி எடுத்துச் சென்றிருப்பதாக சொல்கிறார் மோடி. ஆனால் இங்கே ஒரு விஷயத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். விண்வெளியில் உள்ள இடங்களுக்கும் பொருட்களுக்கும் மத அடிப்படையில் பெயர்கள் வைக்கமுடியாது.
விண்வெளியில் உள்ள கோள்கள் (Planets), துணைக்கோள்கள் (satellites), சிறுகோள்கள் (asteroids), விண்கற்கள் (meteoroids), அவற்றில் உள்ள இடங்கள் ஆகியவற்றுக்கு பெயர்களை வைக்கும் அதிகாரம் International Astronomical Union (IAU) என்ற அமைப்பிற்கு தான் உள்ளது. கடந்த 1919ஆம் ஆண்டிலிருந்து இந்த ’IAU’ அமைப்பு தான் புதிதாக கண்டுபிடிக்கப்படும் விண்வெளி சார்ந்த பொருட்களுக்கும் இடங்களுக்கும் பெயர்களை வழங்கியும் அங்கீகரித்தும் வந்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் விண்வெளி சம்பந்தமான அறிவுருவாக்கத்தில் நடக்க வாய்ப்புள்ள குழப்பங்கள் தவிர்க்கப்படுகின்றன.

இந்த ’IAU’ அமைப்பு பெயர்களை வைப்பதற்கும், பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் தாங்கள் கண்டுபிடத்த விண்வெளி பொருட்களுக்கு வைக்கும் பெயர்களை அங்கீகரிப்பதற்கும் சில விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
அதில் அரசியல், இராணுவம், மதம் சார்ந்த பெயர்கள் வைக்கக்கூடாது என்ற முக்கியமான விதி உள்ளது. இதில், 19ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த அரசியல் தலைவர்களின் பெயர்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று சந்திரயான்-3 விண்களத்தில் இருந்து செலுத்தப்பட்ட ’விக்ரம் லேண்டர்’ நிலவின் தென் துருவத்தில் பாதுகாப்பாக இறங்கியது. ’விக்ரம் லேண்டர்’ இறங்கிய நிலவின் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு, ‘சிவசக்தி புள்ளி’ என்று பெயரிட்டு அழைப்பதை ’IAU’ அங்கீகரித்துள்ளது.
மதம் தொடர்புடைய பெயர்களை வைக்கக்கூடாது என்று விதிமுறை உள்ள போது ‘சிவசக்தி’ என்ற பெயரை ’IAU’ எவ்வாறு அங்கீகரித்து என்பது தான் முக்கியமான கேள்வி?

இந்த ‘சிவசக்தி’ என்ற பெயருக்கான தோற்றம் (Origin) பற்றி குறிப்பிடுகையில், இது இந்திய தத்துவத்தில் ’சிவா’ என்ற ஆண் தன்மையையும் ‘சக்தி’ என்ற பெண் தன்மையையும், இரண்டு சேர்ந்த ’இயற்கையின் இருமையையும்’ குறிப்பதாக இந்த பெயரை பரிந்துரைத்த இந்தியா சார்பில் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது, ‘சிவசக்தி’ என்ற பெயரை பரிந்துரை செய்து ’IAU’-க்கு அனுப்பிய போது, இதனை இந்து மதக் கடவுளர்களின் பெயர் என்று இந்தியா தரப்பில் பெருமையான சொல்லப்படவில்லை. அதனை இந்திய தத்துவம் சார்ந்தது என்றே குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதே பெயர் பற்றி தமிழ்நாட்டில் சொற்பொழிவாற்றும் போது ’சிவசக்தி’ என்பதை இந்து கடவுள்கள் என்று சொல்கிறார் பிரதமர் மோடி. இதில் ஏதாவது ஒன்று பொய்யாகவே இருக்க முடியும் என்பது தெளிவு.
IAU ‘சிவசக்தி’ என்ற இந்த பெயரை ஏற்றுக்கொள்வதற்கு, அதன் விதிமுறையின் படி விண்வெளியில் இடங்களுக்கு பெயர் வைக்கும் போது உலகில் உள்ள பல்வேறு இனக்குழுக்கள், நாடுகள் ஆகியவற்றிலிருந்து சமமான அளவில் பெயர்களை தேர்ந்தெடுப்பதை அது ஆதரிக்கிறது என்பதும் ஒரு காரணமாகும். மேலும், பெயர் வைக்கப்படும் இடத்திற்கு விண்களம் அல்லது செயற்கைகோளை செலுத்திய நாடுகளிலிருந்து பெயரை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக ’IAU’-ன் விதிமுறை தெரிவிக்கிறது. அதேநேரத்தில் அது மத அடிப்படையில் இல்லாமல் இருப்பதையும் அது உறுதி செய்கிறது. இந்த அடிப்படையில் தான் இந்தியாவின் சந்திரயான்-3 விண்களத்தில் இருந்து செலுத்தப்பட்ட ’விக்ரம் லேண்டர்’ நிலவில் இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என்ற பெயரை IAU அங்கீகரித்துள்ளது.
ஆனால் இந்த உண்மையை மறைத்து இந்துக் கடவுளர்களின் பெயரை விண்வெளி வரை கொண்டு சென்றுள்ளதாக தவறாக பரப்பப்பட்டு வருகிறது.