YouTurn

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

கடந்த ஜூன் 4ஆம் தேதி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியின் படி, லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் மூன்று திட்டங்களுக்காக தமிழ்நாட்டில் ரூ.18,600 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அதனால் 8,200 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரியவருகிறது.  



காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தரவு மைய (Data Center) விரிவாக்கத் திட்டம்; கோயம்புத்தூரில் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம் (integrated  industrial electronics hub); திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் L&T கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்டம் ஆகிய மூன்று திட்டங்கள் குறித்து தமிழ்நாடு அரசுக்கும்  L&T நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 



ஆனால் இந்த அறிவிப்பைக் கொண்டு, தவெக அரசு பதவியேற்ற சில நாட்களிலே இந்த ’புதிய முதலீட்டை’ சாத்தியப்படுத்தியிருக்கிறது என்று சமூக வலைத்தளத்தில் பிரசாந்த் ரங்கசாமி பரப்பி வருகிறார். அதாவது, தவெக அரசு புதிதாக இந்த முதலீட்டைக் கொண்டு வந்தது என்ற அர்த்தத்தில் பரப்புகிறார். 


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த செய்தி அறிக்கையை தமிழ்நாடு ’செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை’ வெளியிட்டுள்ளது. அதனை தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த அறிக்கையிலே  ’தரவு மையம் விரிவாக்கத் திட்டம், கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்டம்’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த திட்டங்கள் ஏற்கனவே நடப்பில் இருக்கின்றன, அதனை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் தான் தற்போதைய முதலீடு மேற்கொள்ளப்படுகிறது என்பது இதன் அர்த்தமாகும். 


image.png


மேலும், L&T நிறுவனம் 2021 நவம்பர் மாதம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காஞ்சிபுரத்தில்  90 MW திறன் கொண்ட தரவு மையம் அமைக்க தமிழ்நாடு அரசுடன் அந்நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டம் குறித்து ஐந்தாண்டுகளுக்கு முன்பே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. 



அதேபோல், கடந்த 2026 ஏப்ரல் மாதமே கோவையில் 40 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த மின்னணு தொழில் வாளகத்தை அமைக்கவிருப்பதாக L&T நிறுவனம் அறிவித்தது. மின்னணு பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சி முதல் உற்பத்தி வரையில் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த வாளகம் கட்டமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் தற்போது கையெழுத்தாகியிருக்கிறது. 

 


அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் 1000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்கவிருப்பதாக 2025 ஜூலை மாதமே L&T நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேற்கூறிய தகவல்களிலிருந்து, தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான் அல்லது ஏற்கனவே இருக்கும் திட்டங்களின் விரிவாக்கம் மட்டும் தான் என்பது தெரியவருகிறது. இதனை தமிழ்நாடு அரசின் செய்தி அறிக்கையே ஒப்புக்கொள்கிறது.


ஆனால் தவெக அரசு இந்த மூதலீட்டை புதிதாக ஈர்த்ததாக திரிக்கப்பட்ட தவறான தகவலை பிரசாந்த் ரங்கசாமி பரப்பி வருகிறார்.


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகளா? புதியதா? தொழிற்துறை அமைச்சரின் வீடியோ ஒரு அலசல்!

தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டில் தவெக அரசு புதிதாக அமைக்கும் என்று சொல்லப்பட்ட கட்டமைப்புகள், திட்டங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் இருப்பவைதான்.

சமீபத்தியவை