YouTurn

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

’MGNREGA’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட ‘VB-G RAM G’ திட்டம் கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய திட்டம் என்பது வெறுமனே பெயர் மாற்றம் மட்டுமல்ல, முந்தைய திட்டத்திலிருந்து பல முக்கியமான அம்சங்களில் வேறுபடுவதாக இருக்கிறது.


முதலில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் கிராமப்புறங்களில் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அதனால் தான் பொது மக்கள் இத்திட்டத்தினை ‘100 நாள் வேலைத் திட்டம்’ என்று அழைத்தனர். இப்போது ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ‘VB-G RAM G’ திட்டத்தின் கீழ் வேலை நாட்களை 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்துவதாகக் கூறப்படுகிறது. 


image.png


ஆனால் அனைத்து மாநிலங்களிலும் சீராக 125 வேலை நாட்களை அமல்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒன்றிய அரசு மொத்தமாக ஒதுக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலாக, மாநில வாரியான நெறிமுறைசார் ஒதுக்கீடு (state-wise normative allocation) என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு அளவுகளில் நிதி ஒதுக்கப்படும். அதாவது, ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை அளவு, அதில் வேலைத்திறன் உள்ள மக்களின் எண்ணிக்கை,  தனிநபர் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (per capita GSDP), மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அந்த மாநிலத்தின் பங்களிப்பு, அந்த மாநிலத்தில் உள்ள காடுகளின் அளவு ஆகியவற்றைக் கொண்டுதான் நிதி ஒதுக்கீடு தீர்மானிக்கப்படும். இத்தனை அம்சங்களில்  தனிநபர் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது,  தனிநபர் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ள ‘ஏழை மாநிலங்களுக்கு’ தான் அதிக நிதி ஒதுக்கப்படும்.


image.png


மேலும், இத்திட்டத்தை எவ்வளவு சிறப்பாகச் ஒரு மாநிலம் செயல்படுத்தியுள்ளன என்பதை இந்தத் திட்டத்தின் இரண்டாவது ஆண்டில் மதிப்பிட்டு, அதற்கேற்றவாறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு ‘திட்டத்தைச் செயல்படுத்தும் திறன்’ (performance criteria) என்பது வேலைக்கான ஊதியம் (கூலி) உரிய நேரத்தில் வழங்கப்படுதல், தணிக்கை நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றுதல் மற்றும் பணிகள் எத்தனை சதவீதம் நிறைவடைந்துள்ளன ஆகியவற்றை கணக்கில் கொண்டு முடிவு செய்யப்படும். இதனால், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (MGNREGA) கீழ் வேலை பெறுவதற்கான உரிமை என்றிருந்த நிலை, தற்போது புதிய திட்டத்தால் பலவீனப்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 



மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான மொத்த நிதியில் 90 சதவீதம் ஒன்றிய அரசு தான் வழங்கவேண்டும். மீதி 10 சதவீதம் மட்டுமே மாநில அரசுகளின் பொறுப்பாக இருந்தது. ஆனால் தற்போது, ‘VB-G RAM G’ திட்டத்தின் கீழ் 60:40 என்று நிதிப் பொறுப்பு மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது ஒன்றிய அரசு 60 சதவீத நிதி மட்டுமே வழங்கும். மாநில அரசு 40 சதவீத நிதி வழங்கவேண்டும். இதனால், இத்திட்டத்திற்காக இதுவரை மாநில அரசுகள் ஒதுக்கியதை விட மூன்று மடங்கு அதிகமாக ஒதுக்கவேண்டிருக்கும். 


image.png


பழைய MGNREGA திட்டத்தில் வேலை நாட்களுக்கான கூலி மொத்தமாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வந்தது. பொருட்களுக்கான செலவுகள், நிர்வாக செலவுகள் ஆகியவற்றுக்கு மட்டும்தான் மாநில அரசுகள் 25 சதவீதம் நிதி ஒதுக்கி வந்தது. ஆனால் தற்போது ‘VB-G RAM G’ திட்டத்தின் கீழ் கூலிக்கான நிதியில் 40 சதவீதம் மாநில அரசுகள் ஒதுக்கவேண்டும். அதேபோல், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு தற்போது மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி ஒதுக்கவேண்டும். 


2024-25 நிதியாண்டில் இத்திட்டத்திற்கான மாநில அரசுகள் ஒதுக்கிய நிதியைவிட தற்போது 2026-27 நிதியாண்டில் 600 சதவீதம் வரை அதிகமாக நிதி ஒதுக்கிவேண்டிய நிலைக்கும் மாநிலங்கள் தள்ளப்பட்டுள்ளதாக ‘The Hindu’ குறிப்பிடுகிறது. 


2024-25 ஆண்டில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஒன்றிய அரசு 96,402 கோடி ஒதுக்கியது. இது மொத்த செலவில் 92.6 சதவீதமாகும். ஆனால் தற்போது, 87,804 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த செலவில் வெறும் 63.3 சதவீதம் மட்டுமே ஆகும். அதே நேரத்தில், 2024-25 ஆண்டில் 7.4 சதவீதமாக இருந்த மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு தற்போது 36.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.  


இதனால் இத்திட்டத்திற்கான உத்தர பிரதேச மாநிலத்தின் செலவு 1007 மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் 593 மடங்கும், ராஜஸ்தானில் 674 மடங்கும், பீகாரில் 637 மடங்கும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 



இது மாநில அரசுகள் மீது அதிகமான நிதிப் பலுவை சுமத்துவதாக இருக்கிறது. மேலும், வேலைவாய்ப்பின்மைக்கான படிகள் (unemployment allowances) வழங்கும் கடமையும் மாநில அரசுகளிடமே உள்ளது. இதனால் இதற்கும் சேர்த்து மாநிலங்கள் செலவுகள் செய்யவேண்டும். இவையெல்லாம் மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றுவதாக இருக்கிறது. இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்துவதில் போய் முடியவேண்டும். இந்த மோசமான இரண்டு நிலைகளில் ஏதாவதுவொன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் தான் பெரும்பாலான இந்திய மாநிலங்கள் இந்த புதிய திட்டத்தை எதிர்த்து வருகின்றன.


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகளா? புதியதா? தொழிற்துறை அமைச்சரின் வீடியோ ஒரு அலசல்!

தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டில் தவெக அரசு புதிதாக அமைக்கும் என்று சொல்லப்பட்ட கட்டமைப்புகள், திட்டங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் இருப்பவைதான்.

சமீபத்தியவை