ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகளா? புதியதா? தொழிற்துறை அமைச்சரின் வீடியோ ஒரு அலசல்!
தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டில் தவெக அரசு புதிதாக அமைக்கும் என்று சொல்லப்பட்ட கட்டமைப்புகள், திட்டங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் இருப்பவைதான்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசாங்கத்தில் தொழிற்துறை அமைச்சராக இருக்கிறார் கீர்த்தனா. சமீபத்தில் அவர் தமிழ்நாட்டை நோக்கி தொழில் மூலதனத்தை ஈர்க்கும் முயற்சியாக, தமிழ்நாட்டில் மூலதனமிடுவதற்கு உகந்த சூழல் மற்றும் உள்கட்டமைப்புகள் இருப்பதாக விளக்கி ஒரு சிறு வீடியோ வெளியிட்டிருந்தார்.
Tamil Nadu is not waiting for the future, we are building it.
From single-window approvals and faster clearances to AI cities, green hydrogen, advanced manufacturing, and the space economy, Tamil Nadu is creating an ecosystem where innovation meets execution.
Under the… pic.twitter.com/d0Ipoc4BVR
அதில், ‘தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் தொழிலுக்கான உரிமங்கள் வழங்க ஒற்றை சாளர முறை (single-window approval) கொண்டுவருவதாகவும், அதன் மூலமாக 21 நாட்களில் தொழில் தொடங்க உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இதில் தாமதங்கள் ஏற்படும் போது அது சார்ந்த பிரச்சினை நேரடியாக தொழிற்துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்றும்’ உறுதி கூறுகிறார் அமைச்சர் கீர்த்தனா. மேலும், செய்றகை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தான் இனி எதிர்காலம் என்பதால் AI நகரங்கள் (AI Cities) தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ளதாகவும், அதோடு ஆளில்லா விமானங்களுக்கான (Drones) சோதனைத் தளம், மின்சார வாகனங்கள் உற்பத்தி, பசுமை ஹைட்டரஜன் உற்பத்தி, விண்வெளி சார்ந்த உற்பத்தி போன்றவையெல்லாம் தமிழ்நாட்டில் அமையவுள்ளதாகவும்’ அமைச்சர் கீர்த்தனா பேசியுள்ளார்.

முதலில், தொழில் தொடங்குவதற்கான உரிமங்கள் வழங்க ஒற்றை சாளர முறை (single-window approval) என்பது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதே, 2017 ஆம் ஆண்டு The Tamil Nadu Business Facilitation Act என்ற சட்டத்தின் படி கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திற்கான அரசிதழ் 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் கீழ் ‘TAMIL NADU SINGLE WINDOW PORTAL’ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையத்தளத்தின் மூலமாக 30 அரசு துறைகளில் 200க்கு மேற்பட்ட தொழில்கள் குறித்த உரிமங்கள் பெற ஒற்றை சாளர முறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதன் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தொழில் தொடங்குவதற்கான உரிமம் கொடுக்கப்படுவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொழில் தொடங்குவதற்கான உரிமங்கள் வழங்க ஒற்றை சாளர முறையின் (single-window approval) கீழ் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.
பாதுகாப்புச் சோதனை உள்கட்டமைப்பு (DTI) திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதன்முதலாக ஆளில்லா விமானங்களுக்கான (Drones) சோதனைத் தளம் தமிழ்நாட்டில் அமைக்கும் பணி 2023 ஆகஸ்ட் மாதமே அறிவிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள வல்லம் வடகல் சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்காவில், 2.3 ஏக்கர் நிலப்பரப்பில் 45 கோடி ரூபாய் செலவில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன் (Joint venture) இந்த Drone சோதனைத் தளம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல், மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு ஏற்கனவே முன்னிலையில் தான் இருக்கிறது. இந்தியாவில் உள்ள 70 சதவீத மின்சார இரு சக்கர வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்தியாவின் மொத்த மின்சார வாகனப் பயன்பாட்டில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. ஏற்கனவே Ola Electric, TVS Motor, Ather Energy போன்ற மின்சார வாகன நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

அதேபோல், இந்தியாவின் முதல்முறையாக பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தூத்துக்குடியில் அமைக்கும் வகையில் 2024ஆம் ஆண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த ’Sembcorp’ என்ற நிறுவனம் பசுமை ஹைட்டரஜன் அல்லது அமோனிய தயாரிப்பு தொழிற்சாலையை தூத்துக்குடியில் அமைக்க 36,238 கோடி வரை முதலீடு செய்யவிருப்பதாக 2024ஆம் ஆண்டிலே செய்திகள் வெளிவந்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்துள்ளது.

விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிக்கும் வகையில் 2023ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ’இந்திய விண்வெளி கொள்கை’ என்பதை வடிவமைத்தது. இதனைத் தொடர்ந்து குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களும் இந்தக் கொள்கைக்கு ஏற்றவாறு மாநில அளவில் கொள்கைகளை வடிவமைத்தன. இதனைத் தொடர்ந்து ’தமிழ்நாடு விண்வெளித் தொழில் கொள்கை’ 2025 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 கோடிகள் வரை முதலீடுகளை ஈர்க்கவும், இதன் மூலம் 10,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் இலக்கு வைக்கப்பட்டது.
தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டில் தவெக அரசு புதிதாக அமைக்கும் என்று சொல்லப்பட்ட கட்டமைப்புகள், திட்டங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் இருப்பவைதான் என்பது இதன் மூலம் தெளிவாக தெரியவருகிறது.