YouTurn

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில் உ.பி முதலிடம்.. தமிழ்நாட்டின் நிலவரம் ?.. NCRB 2022 தரவுகள் கூறுவதென்ன..!

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில் உ.பி முதலிடம்.. தமிழ்நாட்டின் நிலவரம் ?.. NCRB 2022 தரவுகள் கூறுவதென்ன..!
2023  டிசம்பர் 3 அன்று, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2022-ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்திர அறிக்கையை "இந்தியாவில் குற்றங்கள் 2022" என்ற தலைப்பில் வெளியிட்டது. 2021-ல் வெளியிடப்பட்ட அறிக்கையுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டிற்கான அறிக்கை கிட்டத்தட்ட 2 மாதகால தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிக்கப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்று வெளியிடப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அளவில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் குற்றங்கள் வெகுவாக அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறதே தவிர, குற்றங்கள் குறைந்தபாடில்லை. மேலும் இந்த குற்றங்களின் மூலம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினரும் வயது வேறுபாடியின்றி தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள்:

கடந்த ஆண்டு NCRB தரவுகள் வெளியிடப்பட்ட போதே பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஆனால் நடப்பு ஆண்டிலும் இதே நிலையே நீடித்துள்ளதால் இது முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.

இதன்படி, பட்டியலினத்தவருக்கான எதிராக நடந்துள்ள மொத்தமுள்ள 57,582 குற்றங்களில், உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 15,368 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதலே உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மேலும், 8,752 வழக்குகளுடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும், 7,733 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. மேலும் மேற்கு வங்கத்தைத் தவிர, நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட 6 மாநிலங்களில் குற்றங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன என்பதையும் கீழே உள்ள வரைபடத்தின் மூலம் அறியலாம்.

 

இதே போன்று பட்டியலினத்தவர்களுக்கு எதிராக இந்தியாவில் கடந்த 2014 முதல் 2022 வரை நடந்துள்ள குற்றங்களின் எண்ணிக்கையை கீழே உள்ள விளக்கப்படத்தின் மூலம் தெளிவாக அறியலாம்.

 

விதிவிலக்காக உள்ள மேற்குவங்கம் :

இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் எல்லாம் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக காணப்பட்டாலும், மக்கள் தொகை அதிகம் கொண்ட மேற்குவங்கம் இந்தப் பட்டியலில் உள்ள மாநிலங்களுடன் முரண்பட்டு காணப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் பட்டியல் சாதியினர் இருக்கின்றனர். இருப்பினும் கடந்த 9 ஆண்டுகளாக அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 150-க்கும் குறைவாகவே உள்ளது.

இது அங்கு பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களைப் புகாரளிக்க கூட வசதி இல்லாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகிறதோ என்ற கேள்வியையும், கவலையையும் சேர்த்தே எழுப்புகிறது. எனவே மேற்குவங்க அரசு அங்கு நிலவும் கண்ணுக்கு தெரியாத சாதிவெறி தாக்குதல்களை இனியாவது உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

 

தமிழ்நாட்டில் நிகழும் குற்றங்கள்:

உத்திரபிரதேசத்தை விட பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்களை குறைவாக பதிவு செய்யும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கூட, 2014 இல் 1494 ஆக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை, 2022 இல் 1761 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கடந்த 2014-ஐ காட்டிலும், கடந்த 2022-இல் 18% குற்றங்கள் அதிகரித்துள்ளன.

 

பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள்:

பட்டியல் பழங்குடியினருக்கு (ST) எதிரான குற்றங்கள் குறித்து மாநிலவாரியாக ஆய்வு செய்ததில், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சி செய்து வரும் மத்தியப் பிரதேசம் மாநிலம் 30% குற்றங்களுடன் முதலிடத்தில் இருந்துவருவதை அறிய முடிந்தது. மேலும் இந்த எண்ணிக்கை கடந்த 2014-உடன் ஒப்பீடு செய்து பார்த்ததில் இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும் எஸ்.சி பிரிவினருக்கு எதிரான குற்றங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் மாநிலம், எஸ்.டி பிரிவினருக்குஎதிராக நடத்தப்பட்ட குற்றங்களிலும் 2,521 வழக்குகளுடன் அதே இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் ஒரிசா 773 வழக்குகளுடன் உள்ளது.

 

இதே போன்று பட்டியல் பழங்குடியினர்களுக்கு எதிராக இந்தியாவில் கடந்த 2014 முதல் 2022 வரை நடந்துள்ள குற்றங்களின் எண்ணிக்கையை கீழே உள்ள விளக்கப்படத்தின் மூலம் தெளிவாக அறியலாம்.

 

கடந்த 2014 முதல் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிரான குற்றங்கள் 43 சதவீதமும், பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 48 சதவீதமும் அதிகரித்துள்ளன. இத்தகைய தரவுகளின் மூலம், சாதிகள் முன்னிலைபடுத்தப்பட்டு வரும் இந்தியாவில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்களின் வாழ்க்கை எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை.

ஆதாரங்கள்:

https://ncrb.gov.in/uploads/nationalcrimerecordsbureau/custom/1701607577CrimeinIndia2022Book1.pdf

https://ncrb.gov.in/uploads/nationalcrimerecordsbureau/custom/1701608364CrimeinIndia2022Book2.pdf

https://ncrb.gov.in/uploads/nationalcrimerecordsbureau/custom/ciiyearwise2022/1701608543CrimeinIndia2022Book3.pdf
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை