ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வதந்திகள் மூலமாக அரசியல் செய்யும் தலைவர்கள் !

இந்து அறநிலையத்துறை கூறியதாக நிர்மலா சீதாராமன் பரப்பிய தவறான செய்தி:
இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யவும், நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காண வசதியாக பெரிய திரைகளில் திரையிடவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகளோ அல்லது அன்னதான நிகழ்வுகளோ நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு அரசு வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாகக் கூறி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று (ஜனவரி 21) பதிவு செய்திருந்தார்.
TN govt has banned watching live telecast of #AyodhaRamMandir programmes of 22 Jan 24. In TN there are over 200 temples for Shri Ram. In HR&CE managed temples no puja/bhajan/prasadam/annadanam in the name of Shri Ram is allowed. Police are stopping privately held temples also… pic.twitter.com/G3tNuO97xS
— Nirmala Sitharaman (@nsitharaman) January 21, 2024
மேலும் அதில், தினமலர் செய்தியைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் இந்த இந்து எதிர்ப்பு தன்மை மற்றும் வெறுப்புணர்வுக்கு தனது கண்டனங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டது.
எனவே இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் "நாளை சிறப்பு பூஜைகள் அன்னதானம் நடத்திட எங்கும் தடை விதிக்கவில்லை. அவதூறான பொய்ச்செய்திக்கு வன்மையான கண்டனம். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. அதனையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என தினமலர் நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீயநோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தினமலர் நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது." என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு எந்த எதிர்ப்பும் இந்து சமய அறநிலையத்துறையால் வழங்கப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரும் கூட, தன்னுடைய எக்ஸ் பதிவை நீக்காத ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீங்கள் இந்துமத எதிர்ப்பாளர்கள் இல்லை என்றால், கோவில்களில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை திரையிட்டு நிரூபித்துக் காட்டுங்கள் என்பது போன்று தமிழ்நாடு அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளது, பல்வேறு அரசியல் தலைவர்கள் இடையேயும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
If indeed there is no order (ban on live telecast of Jan 22 event), then I challenge the minister and TN Govt to say that devotees can perform their bhajans. I challenge them to set up a screen and openly declare that they wouldn't have any objection to Hindu devotees watching… pic.twitter.com/Cl41PoFagr
— TIMES NOW (@TimesNow) January 21, 2024
அயோத்தி ராமர் கோவில் பெயரில் பிற மாநிலங்களிலும் அரசியல் செய்யும் தலைவர்கள்:
தமிழ்நாட்டைப் போன்றே, பாஜக ஆட்சி செய்யாத பிற மாநிலங்களிலும் இவ்வாறு வதந்திகள் தவறாகப் பரப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளரான அமித்மாள்வியா, மேற்கு வங்கத்திலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.
Since the oppressive Mamata Bannerjee administration is doing everything in their power, most of it illegal, to stop Bengali Hindus from holding anushthaan, puja, public programs and visiting Temples, to celebrate Pran Pratistha of Ram Lalla in Ayodhya, under various pretext,… https://t.co/EyhONVAqpl
— Amit Malviya (@amitmalviya) January 21, 2024
இதே போன்று அயோத்தியில் ராமர் கோவில் நிகழ்வுடன் தொடர்புடைய விழாக்களுக்கு இடையூறு விளைவிக்க மேற்கு வங்க அரசு முயல்கிறது என்று கூறி, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திரிணாமூல் கட்சித் தலைவர்கள், கடந்த ஆண்டு மாநில மின்சார வாரியத்தின் பழைய சுற்றறிக்கையைப் பயன்படுத்தி, ராமர் பூஜைகள் நடைபெறும் பகுதிகளில் மின்வெட்டுக்கு மேற்குவங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறி தற்போது பாஜக தலைவர்கள் அவதூறு பரப்புகிறார்கள். தற்போது, நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கவில்லை என பொய்யான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இதன் மூலம் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அயோத்தி ராமர் கோவில் திறப்பதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பல்வேறு வதந்திகள் பரவி வருவதையும், அரசியல்கட்சித் தலைவர்கள் பலரும் மதத்தின் பெயரில் அரசியல் செய்து வருவதையும் அறிய முடிகிறது.
அயோத்தியில் தொடரும் சர்ச்சைகள்:
கடந்த 1528-ம் ஆண்டில் முகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதியான ‘மீர் பாக்கி’ என்பவரால் பாபர் மசூதி கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பல்வறு சர்ச்சைகளுக்கு பின்னர் கடந்த 1991-ல் உபியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், கடந்த 1992 டிசம்பர் 06 அன்று, மசூதி இருப்பது இராமர் பிறந்த இடம் என்றும், அயோத்தியில் ராமர் கோவில் இடிக்கப்பட்டு தான் பாபர் மசூதி அங்கு கட்டப்பட்டுள்ளது என்றும் கூறி, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதுமே பல்வேறு கலவரங்கள் ஏற்பட்டன.
மேலும் இதன் காரணமாக கடந்த 1992-ல் இருந்தே அயோத்தியில் பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2019 நவம்பர் 09 அன்று உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில், இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்றும், முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட வழங்க வேண்டும் என்றும் கூறி பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்பு தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து 2020-யில் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் ஒன்றிய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவி, ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை தீவிரமாக தொடங்கியது.
மேலும் அயோத்தியில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள தன்னிப்பூரில், 21 அடி உயரமும் 36 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய மசூதியாக, மஸ்ஜித் முகமது பின் அப்துல்லா மசூதி திறக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால், தன்னிபூர் கிராமத்தில் மசூதி கட்ட வழங்கப்பட்ட நிலத்தில் எந்தவொரு பணியும் துவங்கப்படவில்லை. மேலும் இங்கு மசூதி எப்போது அமைக்கப்படும் என்பதும் இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது ?
அயோத்தியைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியும், ஔரங்கசீப் ஆட்சியின் போது கோவில் அழிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்றும், மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி இருக்கும் இடத்தில்தான் கிருஷ்ணர் பிறந்தார் என்றும் கூறி வலதுசாரிகள் சிலர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் இதுபோன்ற 3,000 வழக்குகள் வரிசையாகத் தாக்கல் செய்யப்பட்டு, பல மசூதிகள் இடிக்கப்படுமோ என்று சட்ட வல்லுனர்கள் பலரும் வருத்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்..??