YouTurn

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஒரு இஸ்லாமியப் பெண்ணா? வரலாறும் வதந்திகளும்!

இந்தியாவின் முதல் தேசியக்கொடி 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள பர்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. அதன் நீண்ட நெடிய வரலாற்றையும், தேசியக்கொடி கடந்த வந்த பாதையையும் இங்கு காணலாம்.

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஒரு இஸ்லாமியப் பெண்ணா? வரலாறும் வதந்திகளும்!

இந்தியாவின் முதல் தேசியக்கொடி 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள பர்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. 1906, ஆகஸ்ட் 07 அன்று ஏற்றப்பட்டது முதல், 1947 ஆம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்திய தேசியக் கொடி அதன் இறுதி வடிவத்தை அடையும் வரை பலமுறை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


சமீக காலமாகவே பலரும் “இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரையா பத்ருதீன் தியாப்ஜி என்ற இஸ்லாமிய பெண் எனக் கூறுவது முற்றிலும் தவறான செய்தி. இந்திய தேசியக் கொடியை உண்மையில் வடிவமைத்தவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிங்கலி வெங்கய்யாவே” எனக் கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.  



எனவே தற்போது பயன்பாட்டில் இருக்கும் மூவர்ணக்கொடி யாரால் உருவாக்கப்பட்டது? அதற்கு முன்னொடியாக எத்தனை கொடிகள் இருந்துள்ளன? தேசியக் கொடி இறுதி வடிவம் பெற்று அரசியலமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்போது? தேசியக் கொடிக்கு அதன் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டதன் பின்னணி என்ன? போன்ற பல கேள்விகளுக்கான பதிலை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். 


இந்திய தேசியக் கொடி கடந்து வந்த பாதை: 


நிவேதிதா கொடி:


சுவாமி விவேகானந்தரின் தீவிர பக்தை என்று சொல்லப்பட்ட சகோதரி நிவேதிதா இந்தியாவிற்கான தேசியக் கொடியை முதன்முதலில் 1904 ஆம் ஆண்டு உருவாக்கினார். அதில் சிவப்பு வண்ணத்தில, சதுர வடிவில், மஞ்சள் நிற உள்வடிவத்தைக் கொண்டு, வைரமும், தாமரையும் கலந்தது போல ஒரு வடிவமும், நடுவில் வங்காள மொழியில் ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கும். இது ‘நிவேதிதா கொடி’ என்று அழைக்கப்பட்டது. 



இந்தியாவில் ஏற்றப்பட்ட முதல் தேசியக்கொடி: 


சுதேசி இயக்கம் அறிவிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களின் பொருட்களை இந்தியர்கள் வாங்கி உபயோகிக்க மறுத்தனர். அந்த தருணத்தில் இந்தியாவின் முதல் தேசியக்கொடி 'சுசீந்திர பிரசாத் போஸ்' என்பவரால் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள பர்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. தேசியக்கொடியின் நடுவே உள்ள மஞ்சள் நிறத்தில், வந்தே மாதரம் என சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தது. மேலே பச்சை, நடுவில் மஞ்சள், கீழே சிவப்பு என மூன்று நிறத்தில், 8 தாமரைகள், சூரியன் மற்றும் அரைநிலா ஆகியவற்றுடன் இது வடிவமைக்கப்பட்டது.



அந்நிய நாட்டில் முதல் இந்தியக்கொடி: 


அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22, 1907-ல் இரண்டாவது முறையாக புதிய வடிவத்தில் இந்திய தேசிய கொடி ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச சோசியலிச கூட்டத்தில் மேடம் காமா என்றழைக்கப்படும் 'பிகாஜி ருஸ்தம் காமா' என்பவரால் ஏற்றப்பட்டது. இந்த கொடியில் மேலே ஆரஞ்சு நிறமும் அதில் எட்டு தாமரை மலரும், கீழே பச்சை நிறமும் அதில் சூரியன் சந்திரனும், நடுவே மஞ்சள் நிறமும் அதில் வந்தே மாதரம் என்ற சமஸ்கிருத வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது “பெர்லின் குழுமக் கொடி” என அழைக்கப்பட்டது. 



சுயாட்சி இயக்கத்தின் கொடி:


சுயாட்சி இயக்கத்தை உருவாக்கிய 'டாக்டர் அன்னி பெசண்ட்' மற்றும் 'பால கங்காதர் திலகர்' இணைந்து 1917 ஆம் ஆண்டில் 7 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட சிவப்பு மற்றும் பச்சை நிறத்திலான கொடியை வடிவமைத்தனர். இந்த கொடி முற்றிலும் மாறுபட்டு, ஆங்கிலேயர்களின் கொடியுடன் இணைப்பு பெற்று இருந்தது. இந்தக் காரணத்தினாலேயே இந்தகொடி புறக்கணிக்கப்பட்டது.



பிங்கலி வெங்கையா உருவாக்கிய கொடி: 


அடுத்ததாக, 1921 ஆம் ஆண்டு, சக்கர ராட்டினத்துடன் அமைக்கப்பட்ட கொடி, ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரரான 'பிங்கலி வெங்கையா' என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த கொடியின் மையத்தில் சக்கரமும் வெள்ளை, பச்சை, சிவப்பு என மூன்று வண்ணத்திலும் கொடி அமைக்கப்பட்டது. இந்த வடிவத்தை கண்ட மகாத்மா காந்தி, இதே வடிவத்தை சற்று மாற்றியமைத்து உருவாக்கலாம் என்று எண்ணினார்.



அதன்பின்னர், 1931-ம் ஆண்டு கராச்சியில் நடைபேற்ற காங்கிரஸ் கூட்டத்தில், பிங்கலி வெங்கையா மறுவடிவமைப்பு செய்த மூவர்ணக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டது. அந்தகொடியில் மேலே காவி, கீழே பச்சை, நடுவில் வெள்ளை நிறமும் அதில் கை ராட்டை சக்கரமும் பொறிக்கப்பட்டிருந்தது. இதுவே இந்திய தேசிய காங்கிரசின் கொடியும் ஆனது.



இறுதி வடிவம் பெற்ற இந்திய தேசியக் கொடி: 


இந்தியக்கொடியின் இறுதி வடிவத்தை உறுதிசெய்வதற்காக நேரு குழு ஒன்றை அமைத்தார். டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் மௌலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, ராஜாஜி, கே.எம்.முன்ஷி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக இருந்தனர். அக்குழுவானது, 1947 ஜூன் 23 முதல் ஜூலை 14 வரை ஆலோசனை மேற்கொண்டது. அதிகாரப்பூர்வமாக 1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்திய தேசியக் கொடி அரசியலைப்பு சபையால் ஏற்றுகொள்ளப்பட்டது. 



அதன்படி, இந்தப் புதிய கொடியை முறைப்படி ஏற்றுக்கொள்வதற்காக 1947 ஜூலை 22 அன்று அரசமைப்பு அவையில் ஜவாஹர்லால் நேரு ஒரு தீர்மானம் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். அப்போது சுதந்திர இந்தியாவின் மூவண்ணக் கொடியின் முக்கியத்துவம் பற்றி என்றும் நினைவில் இருக்கக் கூடிய வகையில் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி: “இந்தியாவின் தேசியக்கொடி குங்குமப்பூ நிறம் (கேசரி), வெள்ளை, அடர் பச்சை ஆகிய வண்ணங்களில் சம விகிதத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. வெள்ளைப் பட்டையின் மையத்தில், ராட்டை சக்கரத்தை (Charkha) குறிக்கும் வகையில், கடற்படையின் நீல நிறத்தில் ஒரு சக்கரம் இருக்கும். சக்கரத்தின் வடிவமைப்பு, அசோக மன்னரின் சார்நாத் சிங்கத் தூணின் (Sarnath Lion Capital) அபாக்கஸ் (அடிப்பகுதி மேல் இருக்கும் வட்டப் பகுதி) மீது காணப்படும், சக்கர வடிவமைப்பாக இருக்க வேண்டும்.


சக்கரத்தின் விட்டம் வெள்ளைப் பட்டையின் அகலத்திற்கு தோராயமாக இருக்க வேண்டும். கொடியின் நீளத்திற்கும் அகலத்திற்கும் இடையிலான விகிதம் பொதுவாக 2:3 ஆக இருக்கும். நான் உங்கள் முன்பாக இந்தத் தீர்மானத்தை சமர்ப்பிக்கிறேன்” என்றார். அதன்படி, இந்தியாவின் முதல் தேசியக்கொடியை 1947 ஆகஸ்ட் 16 அன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நேரு ஏற்றினார்.



இந்திய தேசியக்கொடியை உருவாக்கியது பிங்கலி வெங்கையாவா? அல்லது சுரையா பத்ருதீன் தியாப்ஜியா?


ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரரான பிங்கலி வெங்கையா, 1921-ம் ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்திற்கு செல்கிறார். அங்கு காந்தியை சந்தித்து இந்தியாவிற்கென ஒரு தேசியக்கொடி வேண்டும் என வலியுறுத்தி, தான் வடிவமைத்த மாதிரிகளையும் காண்பிக்கிறார். அதன்படி, பிங்கலி வெங்கையா வடிவமைப்பு செய்த மூவர்ணக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டது. எனவே பிங்கலி வெங்கையா 'இந்திய தேசியக் கொடியின் அடிப்படை வடிவமைப்பாளர்' என அறியப்படுகிறார். 


சுரையா பத்ருதீன் தியாப்ஜி குறித்து ஆய்வு செய்ததில், அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபலமான முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும், அவரது கணவர் பத்ருதீன் தியாப்ஜி, வெளிநாட்டு தூதராகப் பணியாற்றியுள்ளார் என்பதையும் அறிய முடிந்தது. 


இந்நிலையில் இந்திய தேசியக் கொடியை வடிவமைத்ததில் சுரையா பத்ருதீன் தியாப்ஜியின் பங்கு குறித்து ஆய்வு செய்த போது, நாடாளுமன்ற ஆவணக் காப்பகத்தின் ஆவணம் கிடைத்தது. “1947 ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் விவாதங்கள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த அந்த ஆவணங்களிலிருந்து, ஆகஸ்ட் 14, 1947 அன்று தேசியக் கொடியை அறிமுகப்படுத்திய குழுவின் உறுப்பினர்களின் பட்டியலில் சுரையா தியாப்ஜியின் பெயரும் இடம்பெற்றிருந்ததை காண முடிகிறது. ஆனால் அவர் தேசிய கொடியை வடிவமைத்தாரா இல்லையா என்ற சர்ச்சைக்குரிய கேள்விக்கு இங்கு பதில் கிடைக்கவில்லை.


The Wire” ஊடகத்தில் வெளியான ஒரு கட்டுரையில், சுரையா தியாப்ஜியின் மகள் லைலா தியாப்ஜி, பிரதமர் அலுவலகத்தில் ஐ.சி.எஸ். அதிகாரியாக இருந்த தனது தந்தை பத்ருதீன் தியாப்ஜி, பிரதமர் நேருவின் அறிவுறுத்தலின் பேரில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் ஒரு கொடிக் குழுவை எவ்வாறு அமைத்தார் என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். அசோக சக்கரம் பற்றிய யோசனையை தனது பெற்றோர் எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்பதையும், அவரது தாயார் கொடியின் வடிவத்தை கிராஃபிக் முறையில் எவ்வாறு உருவாக்கினார் என்பதையும் அவர் அதில் விரிவாக விவரித்துள்ளார். 



லைலா தியாப்ஜியின் உரையாடல் மூலம், தேசியக் கொடியில் வெண்மை நிறத்தின் நடுவே முதலில் கைராட்டை சின்னம் தான் இருந்தது. பின்னர், அது அசோக சக்கரமாக மாற்றப்பட்டு, இறுதி வடிவம் கொடுத்ததில் பத்ருதீன் தியாப்ஜி மற்றும் சுரையா தியாப்ஜியின் பங்கு இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது



பிரபல வரலாற்றாசிரியர் சையத் இர்ஃபான் ஹபீப், இது குறித்து கூறுகையில், இது குறித்து உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் பிங்கலி வெங்கய்யாவின் குடும்பத்தினரின் கூற்றுகளையோ, சுரையா தியாப்ஜியின் கூற்றுகளையோ மறுக்க முடியாது” என்றும் கூறியுள்ளார். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை