YouTurn

இந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம்!

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை ஒட்டி, இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம் வெறுப்பு கருத்துகளை பரப்பிவருகிறது

இந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம்!

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 28 நபர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்துத்துவ அமைப்புகள் இந்த சம்பவத்தை பயன்படுத்தி முஸ்லிம் வெறுப்பு கருத்துகளை பரப்பிவருகிறது. சமூக வலைத்தளங்கள் வழியாகவும், நேரடியாகவும் இதனை செய்து வருகின்றனர் சங்கப் பரிவார அமைப்புகள். 


image.png


மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ’போங்கான்’ என்னுமிடத்தில் கழிவறைச் சுவற்றில் பாகிஸ்தான் தேசியக் கொடியை ஒட்டி, “இந்தியா ஒழிக! பாகிஸ்தான் வாழ்க! (ஹிந்துஸ்தான் முர்தாபாத்! பாகிஸ்தான் ஜிந்தாபாத்!)” என்று எழுதியிருக்கிறார்கள். ’போங்கான்’ பகுதியின் போலீஸார் இது தொடர்பாக இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்ததில், சந்தன் மலகர், ப்ரோக்யாஜித் மோண்டல் என்ற ‘சனதானி ஏக்தா மன்ச்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இரண்டு நபர்கள் இதனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மதவாத பிரச்சினையை கிளப்பிவிடவே தாங்கள் இவ்வாறு செய்ததாக அவர்கள் போலீஸிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


image.png


இதேபோல், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான அமித் மாளவியா தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ பக்கத்தில் மத வெறுப்பை பரப்பும் வகையில் பதிவிட்டுள்ளார். அதாவது, ‘கடந்த 24ஆம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள ’அசன்சோல்’ என்னுமிடத்தில் வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, முஸ்லிம்கள் “பாகிஸ்தான் வாழ்க (பாகிஸ்தான் ஜிந்தாபாத்)” என்று கோஷமிட்டத்தாக பரப்புகிறார் அமித் மாளவியா.


image.png


ஆனால் உண்மையில் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘இந்தியா வாழ்க (ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்) அரசியலமைப்புச் சட்டம் வாழ்க (சம்விதான் ஜிந்தாபாத்) என்றுதான் கோஷமிட்டுள்ளனர். 



இதேபோல், ’அகில இந்திய சன்னி ஜமியத்துல் உலமா’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பஹிம்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து மும்பையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷமிட்டதாக தவறாக பரப்பப்பட்டது. ஆனால் அந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் “பாகிஸ்தான் ஒழிக! தீவிரவாதிகள் ஒழிக! (பாகிஸ்தான் முர்தாபாத்! Terrorist முர்தாபாத்)“ என்று கோஷமிட்டது செய்திகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் வைத்திருந்த பதாகையிலே ”பஹல்காமில் (காஷ்மீர்) அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாகக் கொன்றதை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. 


image.png


இந்த பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கப்பல்படை அதிகாரியான வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் இணைய வழி தாக்குதலுக்கு உள்ளாக்கிப்பட்டிருக்கிறார். கடந்த வாரம் பேட்டி ஒன்றில் பேசும்போது, ‘எனது கணவரைக் கொன்றவர்கள் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் அதற்காக முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகள் பழிக்கப்படக் கூடாது’ என்று ஹிமான்ஷி நர்வால் கருத்து தெரிவித்திருந்தார். இதற்காக ஹிமான்ஷி நர்வால் மீது சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பரப்பப்பட்டது. 


image.png


India Hate Lab (IHL) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பஹல்காம் தாக்குதல் நடந்த 10 நாட்களில் இந்தியா முழுவதும் 64 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் நடந்திருப்பதாக தெரிவிக்கிறது. 

image.png


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்தி முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களையும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கும் விதமாக பல பொய் செய்திகளை இந்துத்துவ ஆதரவாளர்கள் பரப்பிவருகின்றனர். நடக்காத ஒன்றை நடந்ததாகவும், நடந்ததை வேறொன்றாக திரித்துக் கூறியும் பொய்யான செய்திகளை பரப்பி மதவெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்துத்துவவாதிகள். 


பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள் இந்தியாவில் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது ஏற்கனவே அம்பலப்பட்ட விஷயமென்றாலும், பஹல்காம் தாக்குதலை ஒட்டி அதே போன்ற வெறுப்பு பிரச்சாரத்தில் கீழ்மட்ட ஊழியர்கள் முதல் தேசிய அளவில் பொறுப்பில் இருப்பவர்கள் வரை எவ்வித தயக்கமும் இன்றி ஈடுபட்டு வருவதை மேற்கண்ட விவரங்கள் மெய்ப்பிக்கிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை