YouTurn

EAC-PM Report மோடியின் வெறுப்பு பேச்சுக்கு ஆதரவாக எழுதப்பட்டதா?

EAC-PM Report மோடியின் வெறுப்பு பேச்சுக்கு ஆதரவாக எழுதப்பட்டதா?
இது போன்ற பேச்சுகளை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்:

“இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர். அதனால் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்கிறது. சில ஆண்டுகளில் மக்கள் தொகையில் பெரும்பான்மை ஆகிவிடுவர்”


இவ்வாறு எல்லாம் பேசுபவர்கள் எப்போதும் துணைக்கு அழைத்துக்கொள்ளும் தரவு என்னவென்றால் 1951 மக்கள் தொகையில் இந்து-முஸ்லிம் மக்களின் சதவிகிதம் எவ்வளவு என்பதையும் 2011 மக்கள் தொகையில் இந்து-முஸ்லிம் மக்களின் சதவிகிதம் எவ்வளவு என்பதையும் ஒப்பிடுவது தான்.

வலதுசாரிகள் மற்றும் தீவிர வலதுசாரிகள் இந்துத்துவா கொள்கைகளை பேசுவதற்கும் வெறுப்பு பிரச்சாரம் செய்வதற்கும் அன்றாடம் பயன்படுத்தும் ஒப்பீடு தான் இது. இதை வைத்தே ‘லவ் ஜிகாத்’ போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்க முடிகிறது. சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடியும் இதே போல் வெறுப்பு பேச்சை பேசினார். அவர் இஸ்லாமியர்களை குறிப்பிடும் போது ‘அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள்’ என்றும் ‘வந்தேறிகள்’ என்றும் குறிப்பிட்டார். இந்த வெறுப்பு பேச்சுக்கு சர்வதேச அளவில் பலரும் கண்டனம்  தெரிவித்து வந்த நிலையிலும் மோடி தொடர்ந்து மதம் சார்ந்து வெறுப்பை விதைக்கும் அரசியல் கருத்துகளையே பேசி வருகிறார்.



இந்நிலையில், மோடியின் பேச்சுக்கு வலு சேர்க்கும் விதமாக ‘பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு’ (EAC-PM) ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. “Share of Religious Minorities: A Cross-Country Analysis” என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில், 1950ஐக் காட்டிலும் 2015ல் இஸ்லாமியர்கள் இந்தியாவில் 43% அதிகமாகியுள்ளனர். இருப்பினும் இந்துக்கள் கிட்டதட்ட 7% குறைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்?

இந்த தகவலை தற்போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தற்போது வெளியிடுவதற்கான நோக்கம் என்ன? பிரதமரின் பேச்சுகளுக்கு துணை போக தானே? நரேந்திர மோடி பிரதமர் ஆனதிலிருந்து இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. ஏற்கனவே, குஜராத் கலவரத்தில் அன்றைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் பங்கு, அவர் மீதான சந்தேக கண்களை முதல் நாள் தொட்டே கூர்மைபடுத்தியது. இந்நிலையில், தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் வெறுப்பு பேச்சுகள், தாக்குதல்கள், புல்டோசர் இடிப்புகள் போன்ற செயல்களால் இந்த மோடியின் மீதான விமர்சனங்கள் கூர்மையடைந்தது. கலவரம் செய்பவர்களை அவர்களது உடையை பார்த்தே தெரிந்து கொள்ளலாம் என்றெல்லாம் மோடி பேசியிருந்தாலும், பெரும்பாலும் வெளிப்படையாக அவரது இஸ்லாமிய வெறுப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தான் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி இருந்தார்.

இந்நிலையில், தற்போது நடந்துவரும் மக்களவை தேர்தலின் முதல் சுற்று முடிந்ததில் இருந்தே மோடி இஸ்லாமிய வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து பேசி வருகிறார். இந்து பெண்களின் தாலியை கூட பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள்; காங்கிரஸ் வாக்கு ஜிகாத் செய்கிறது; OBC, SC, ST இட ஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்றெல்லாம் பேசியதோடு இஸ்லாமியர்கள் ‘அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள்’ என்றும் ‘வந்தேறிகள்’ என்கிற “Dog Whistle” சொற்களைப் பயன்படுத்தினார். இதற்கு ஆதரவு கொடுக்கவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று கருதுவதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்து கவலை தெரிவிப்பவதையும் கேள்விகள் கேட்பதையும் இந்த அறிக்கை ‘கூச்சல்’ (Noise) என்று குறிப்பிடுகிறது.



நியாயமான அச்சத்தையும், கேள்விகளையும் கூச்சல் என்று நிறுவுவது மட்டுமே இந்த அறிக்கையின் நோக்கமாக உள்ளது. அவற்றில் உள்ள பல சிக்கல்கள் பற்றி விரிவாக காண்போம்.

நுனிப்புல் மேய்ந்த அறிக்கை:

மக்கள் தொகையில் இந்துக்களின் பங்கு, இஸ்லாமியர்களின் பங்கு உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள மக்கள் தொகை கணக்கு தேவை. ஆனால், 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு எடுக்கப்படவேயில்லை. 2024 ஆகியும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி எந்த வித தெளிவான காலவரையறையும் தெரியவில்லை. இந்நிலையில், 2015ம் ஆண்டிற்கான உத்தேச தரவுகளை இந்த அறிக்கைக்கு (Estimate) பயன்படுத்தியுள்ளனர். மேலும், 1950 தரவுகளோடு ஒப்பிட்டு ஒரு கதையையும் சொல்கின்றனர். ஆனால், மக்கள் தொகை உயர்வு அல்லது குறைவிற்கான எந்த வித காரணத்தையும் ஆராயாமல் இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ நல்ல சூழ்நிலை தான் உள்ளது முடிவுரை மட்டும் எழுதிவிட்டனர். இதில் கவனிக்கவேண்டியது, மோடி ஆட்சிக்கு வந்ததே 2014ல் தான். இந்த அறிக்கை 2015க்கான உத்தேச கணக்கை வைத்து இந்த முடிவுரையை எழுதியுள்ளது.



பழைய தகவல்:

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வந்த போதே 1950ஐ விட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிற தெரிந்த பழைய தகவலை தற்போது “Rate of Change” என்கிற அதிநவீன கணக்கை போட்டு கொண்டு வந்துள்ளனர். ஒன்றில் இருந்து இரண்டாக உயர்ந்த விலையையோ, எண்ணிக்கையோ, எதுவாய் இருப்பினும் 100% வளர்ச்சி என்று சொல்ல முடியும். அதே நேரத்தில், ஒரு கோடியில் இருந்து ஒரு கோடியே பத்து லட்சம் என்று உயர்ந்தால் அது வெறும் 10% வளர்ச்சி தான். இதை வைத்து 10% குறைவு என்று சொல்லிவிட முடியுமா? முடியாது. ஏனெனில், எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் உயர்வு 10 லட்சமாக இருக்கும். எண்ணிக்கை அடிப்படையில் பார்க்காமல், Rate of Change அடிப்படையில் பார்த்தால் ஒன்றில் இருந்து இரண்டாக உயர்ந்ததே பெரியது என்று வாதிட முடியும். இது போன்ற கணக்கைத் தான் பழைய மக்கள் தொகையை வைத்தும் போட்டுள்ளனர்.

1951 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி :
மொத்த மக்கள் தொகை: 36.10 கோடி
இந்துக்கள்: 30.36 கோடி
இஸ்லாமியர்கள்: 3.56 கோடி
வித்தியாசம் = 26.8 கோடி

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி :
மொத்த மக்கள் தொகை: 121.08 கோடி
இந்துக்கள்: 96.63 கோடி (79.8%)
இஸ்லாமியர்கள்: 17.22 கோடி (14.23%)
வித்தியாசம் = 79.41 கோடி

2011 vs 2015:

மக்கள் தொகையில் 2011ன் படி இஸ்லாமியர்களின் பங்கு 14.23 ஆக இருந்தது. இதுவே, இந்த அறிக்கையின் கணக்கு படி பார்த்தால் 2015ல் 14.09 ஆக உள்ளது. இந்த தரவுகள் சரியென்றால், 2015ல் மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் பங்கு குறைந்து இருக்கிறது என்று தானே பொருள் வரும்? அதற்கான காரணத்தை ஆராயாமல், எந்த வித விளக்கமும் கூறாமல் நகர்வது ஏன்?

பிறப்பு விகிதம்:

2019-21ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல ஆய்வு NFHS-5ன் படி இந்தியாவின் பிறப்பு விகிதம் சராசரியாக 2ஆக குறைந்துள்ளது. இதில், இந்துக்களின் பிறப்பு விகிதம் 1.94 ஆகவும், இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம் 2.36 ஆகவும் உள்ளது. இதுவே, 1992ல் இந்துக்களுக்கு 3.3 ஆகவும், இஸ்லாமியர்களுக்கு 4.4 ஆகவும் இருந்தது. இந்துக்களின் பிறப்பு விகிதம் 1.36 குறைந்த அதே காலக்கட்டத்தில் இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம் 2.04 குறைந்துள்ளது. அதாவது, பிறப்பு விகிதம் இந்துக்களின் அளவில் வீழ்ச்சியடைந்ததை விட இஸ்லாமியர்களின் அளவில் அதிகம் குறைந்துள்ளது. Rate of Change கணக்கு தான் சிறந்தது என்று கருதினால், அத்தனையும் கணக்கிட்டு பார்த்துவிடலாம். Rate of Change அடிப்படையில் இந்துக்களின் பிறப்பு விகிதம் 41% குறைந்துள்ளது. ஆனால், இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம் 47% குறைந்துள்ளது.

[caption id="attachment_55126" align="alignnone" width="753"] Source: The Hindu[/caption]

கல்வி:

இந்துக்களை விட 0.42 அளவில் இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது என்பதற்கு கல்வியும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. எங்கெல்லாம் கல்வியறிவு குறைவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் பிறப்பு விகிதமும் அதிகமாகவே இருக்கும். சராசரியாக, மற்ற மதத்தினரை விட இஸ்லாமியர்களில் கல்வி கற்றோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இது உயர் படிப்பு மட்டுமல்லாது, பள்ளிப்படிப்பை மட்டும் கணக்கு வைத்துகொண்டாலும் இதே நிலையில் தான் உள்ளது.

[caption id="attachment_55125" align="alignnone" width="742"] Source: The Hindu[/caption]

பொருளாதாரம்:

கல்வியை போலவே பொருளாதாரமும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. எங்கெல்லாம் வறுமை இருக்கிறதோ, பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே கூட உத்திர பிரதேசத்திலும் (2.4), பிகாரிலும் பிறப்பு (3) விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, வெறும் மதம் சார்ந்து மட்டுமே பிறப்பு விகிதத்தை அணுகுவது மத வெறியையும் வெறுப்பையும் வளர்க்க உதவுமேயன்றி அறிவை வளர்க்கவோ அல்லது மக்கள் தொகை வளர்ச்சிப்பற்றி அடிப்படை புரிதல்கொள்ளவோ பயன்படாது.

குறையும் பிறப்பு விகிதம்:

இந்திய அளவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது போலவே அனைத்து மதத்தினர் இடையேயும் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் 0.8 என்று இருந்த இடைவெளி தற்போது பாதியாக குறைந்து 0.4 ஆக குறைந்துள்ளது. கல்வியும், பொருளாதார வளர்ச்சியும் பெருக பெருக இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து சம அளவிற்கு வந்துவிடும். இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமிரகத்தில் பிறப்பு விகிதம் 1.5 தான். துருக்கியில் 1.9; கத்தாரில் 1.8; ஈரானில் 1.7 என்று தான் பிறப்பு விகிதம் உள்ளது. எனவே, இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள் என்பது வெறும் மதவெறியில் கூறப்படுவதே.

 
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை