YouTurn

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

இந்தியாவில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்​திர பிர​தான் பதவி விலகவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் இளைஞர்கள் கடந்த மூன்று வாரங்களாகப் போராடி வந்தார்கள். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற இயக்கம் இந்த போராட்டத்தைத்  தொடங்கியிருந்தாலும், தற்போது பல்வேறு தரப்பினர் தங்களது சொந்த கோரிக்கைகளுடன் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்கள். 21 நாட்களாக ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக்-ஐ டெல்லி போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் சேர்த்தனர்.  



இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 20ஆம் தேதி இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டார்கள். இந்தப் பேரணியில் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இளைஞர்கள் வந்து கலந்து கொண்டார்கள். பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது டெல்லி போலீஸாரும் ’Rapid Action Force’ என்ற துணை இராணுவப்படையினரும் தாக்குதல் நடத்தினர். இதனால் பல மாணவர்கள், இளைஞர்கள் காயமடைந்தனர். 


image.png


இந்நிலையில் பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்கள் மீது டெல்லி போலீஸார் தடியடி நடத்த பயன்படுத்திய லத்திக் கம்புகளில் ஆணிகள் இருந்ததாகவும், இவ்வாறு ஆணிகள் கொண்ட கம்புகளைக் கொண்டு தாக்கியதால் இளைஞர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், போராடிய இளைஞர்கள் மீது துணை இராணுவப்படையினர் பெல்லட் குண்டுகளைக் (Pellet guns) கொண்டு தாக்கியதாகவும் தகவல் பரவியது. 


ஆனால் லத்திக் கம்புகளில் ஆணிகள் இருந்ததாகவும், பெட்லட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுவது அனைத்தும் திரிக்கப்பட்ட தவறான தகவல்கள் என்று டெல்லி போலீஸும் ஒன்றிய அரசின் ’Press Information Bureau (PIB)’ என்ற செய்தித் தகவல் அலுவலகமும் பரப்பியது. 


எது உண்மை? 


இது குறித்து நம்பகமான செய்தி ஊடகங்களில் தேடினோம். முதலில் ‘The Wire’ இணைய ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையைக் காணமுடிந்தது. டெல்லி போலீஸார்  ஒருவர் வைத்திருந்த லத்திக் கம்பில் ஆணி இருந்தது தொடர்பாக ‘Alt News’ வெளியிட்டிருந்த தரவுகளின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தது. 


image.png


ஜூலை 20 போராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டக்காரர் போலீஸார் ஒருவரின் கையில் இருந்த லத்தியை வாங்கி அதில் ஆணி இருப்பதை சுட்டிக்காட்டும் வீடியோவை ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவின் Metadata-வை ‘Alt News’ பகுப்பாய்வு செய்ததில், இந்த வீடியோ ஜூலை 20ஆம் தேதி மாலை 4.33 மணிக்கு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.


மேலும் இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் (Geo-Location) குறித்து பகுப்பாய்வு செய்தத்தில் இது டெல்லியில் ஜன்பாத் என்ற இடத்தில் உள்ள ‘The Imperial’ என்ற ஐந்து நட்சத்திர விடுதி அருகில் எடுக்கப்பட்டது என்பது தெரியவருகிறது. இளைஞர் பேரணி இந்த ஜன்பாத் பகுதியிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த லத்தியை கையில் வைத்திருந்த போலீஸாரின் பெயர் விஷால் தோமர் என்பது அந்த வீடியோவில் பதிவான Name Badge மூலமாகத் தெரியவருகிறது. 


இதிலிருந்து ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸார் கைகளில் ஆணி பதித்த லத்தி இருந்தது உண்மைதான் என்பது தெரியவருகிறது. டெல்லி போலீஸ் மற்றும் ஒன்றிய அரசின் PIB சொல்வது போல் இது பழைய வீடியோ அல்ல, ஜூலை 20 போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதுதான்.


அடுத்ததாக, இந்த போராட்டத்தில் பெட்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது குறித்த செய்திகளைத் தேடினோம். ‘The Hindu’ வெளியிட்டிருந்த செய்தியின்படி, தென்மேற்கு டெல்லியில் வசித்து வரும் 19 வயதான சாஹில் லோச்சாப் என்பவர் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட பெல்லட் குண்டு தாக்குதலால் காயமடைந்ததாகவும், டெல்லி AIIMS மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அந்த பெட்லட் குண்டுகள் அகற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. 


image.png


மேலும், ‘பெல்லட் குண்டு சாஹில் லோச்சாப்-ன் கண்ணில் தாக்கியுள்ளதாகவும் அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டிருந்தாலும், கருவிழியில் செய்யப்படவிருக்கும் இரண்டாவது அறுவை சிகிச்சையில் தான் அவரது இயல்பான பார்வை திரும்புமா இல்லையா என்பது தெரியவரும்’ என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சாஹில் லோச்சாப்-ஐ போலவே ஷேக் இர்ஷத் மன்சூரி என்பவரும் பெல்லட் குண்டால் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. 


image.png


‘The Print’ செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஷேக் இர்ஷத் மன்சூரி என்பவரின்  கண், கீழ் தாடை, தோள்பட்டை மற்றும் மார்பு ஆகியவற்றில் பெட்லட் குண்டுகள் காயம் ஏற்படுத்தியிருக்கின்றன. அவரது கண், கழுத்து ஆகியவற்றில் இருந்து பெல்லட் குண்டுகள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டிருப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இவையெல்லாம், ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸும் துணை இராணுவப்படையும் மாணவர் இளைஞர்கள் மீது பெல்லட் குண்டுகளைக் கொண்டு தாக்கியிருப்பதை உறுதிபடுத்துவதாக இருக்கிறது. ஆனாலும் டெல்லி போலீஸும் PIB-யும் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை என்று பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றன.


கட்சிகளின் இணைய பிரிவு, கட்சியின் பிரமுகர்கள் பொய் செய்திப் பரப்பி வந்த நிலை மோசமடைந்த தற்போது போலீஸ், PIB போன்ற அரசின் நிறுவனங்கள் பொய் செய்திகளை வெளியிடுவது ஊடக செயல்பாட்டாளர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை