யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2025 செப்டம்பரில் டெல்லியில் அமித்ஷாவைச் சந்தித்துவிட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியேறியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை சிபிஐ விசாரணைக்கு பிறகு முகத்தை மூடிச் சென்ற விஜய் என்று கூறி தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் ஜனவரி 12 அன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. மேலும் விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ விரும்பியதாகவும், பொங்கல் பண்டிகை வருவதால் வேறொரு தேதியில் விசாரணைக்கு ஆஜராவதாக விஜய் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இருந்து விசாரணையை முடித்துவிட்டு கிளம்பிய போது, காரில் முகத்தை மூடிக்கொண்டு சென்றதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
முகத்தை மூடிட்டு போறன் 😂😂
அடி பலமோ @TVKVijayHQ #Jananayagan pic.twitter.com/xJ0pSRcROh
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Galatta Mediaவில் ”Car -ல் முகத்தை மறைத்துக்கொண்டு வந்த தமிழக அரசியல் தலைவர்..?” என்ற தலைப்பில் செப்டம்பர் 17,2025 அன்று பரவி வரும் புகைப்படத்தில் உள்ள காட்சிகளை வைத்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாகவும், அவரை சந்தித்து விட்டு காரில் வெளியே வரும் போது kerchief-யால் இபிஎஸ் தனது முகத்தை மறைத்துக்கொண்டு சென்றதாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்து தேடிய போது, Hindu Tamil ஊடகத்தில் ”நான் முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக முதல்வர் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது - இபிஎஸ்” என்று குறிப்பிட்டு செய்தி வெளியாகியிருந்தது. அதில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது முகத்தை துடைத்ததை, மூடிக்கொண்டு சென்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த 2025 செப்டம்பரில் டெல்லியில் அமித்ஷாவைச் சந்தித்துவிட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியேறியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை சிபிஐ விசாரணைக்கு பிறகு முகத்தை மூடிச் சென்ற விஜய் என்று கூறி தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
