யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ, கோவை பெரியநாயக்கன்பாளைம் மேம்பாலத்தில் மழைநீர் தேங்கிய போது எடுக்கப்பட்டதாகும். இந்த மேம்பாலத்தை பிரதமர் மோடி 2024ஆம் ஆண்டு திறந்து வைத்தார். இதனை ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்று தவறாக பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கோவை- அவினாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவீன்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலம் அக்டோபர் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. இதையடுத்து இந்த மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என பெயர் வைத்ததற்கு பல்வேறு சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது kamadenu ஊடகப்பக்கத்தில் ”கோவை பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி” என்ற தலைப்பில் 13 மார்ச், 2025 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் கோவை மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.115 மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் கட்டமைப்புடன், இந்த மேம்பாலம் 2023 டிசம்பரில் திறக்கப்பட்டது. இந்நிலையில் கோவையில் பெய்த மழையால் மேம்பாலத்தின் மேல் பகுதியில் குறிப்பிட்ட தூரத்துக்கு குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த மேம்பாலம் குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது, 2024 மார்ச் 11ம் தேதி ஒன்றிய அரசின் செய்தி விளம்பரப் பிரிவான pib வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பை பார்க்கமுடிந்தது. அதில், நாகப்பட்டினம், கூடலூர்-மைசூர் சாலையில், பெரிய நாயக்கன் பாளையம்- கோவைப் புறநகர்ப் பகுதியில் ரூ.99 கோடி செலவில் 1.76 கி.மீ. தூரத்திற்குக் கட்டப்பட்ட மேம்பாலத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
இதன் மூலம் பரவி வரும் வீடியோ, கோவை பெரியநாயக்கன்பாளைம் மேம்பாலத்தில் மழைநீர் தேங்கிய போது எடுக்கப்பட்டதாகும். இந்த மேம்பாலத்தை பிரதமர் மோடி 2024ஆம் ஆண்டு திறந்து வைத்தார். இதனை ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.
