யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கதேசத்தில் 2025 செப்டம்பரில் நடந்த பேரணி ஒன்றின் வீடியோ இது. இதை மேற்கு வங்கத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
மேற்கு வங்கத்தில் SIR எனும் வாக்காளர் தீவிர திருத்த பணி வேண்டாம் என கிளம்பும் சட்ட விரோதமாக மேற்குவங்கத்தில் குடியிருக்கும் வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள்..!!
தீவிர திருத்த பணி மேற்கொண்டால் சட்ட விரோதமாக தங்கிய இவர்களின் ஓட்டு உரிமை பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காங்கிரஸ், மம்தா,திமுக ஆட்சியாளர்களால் இந்தியாவில் இப்போது எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கானுங்க என்று தமிழக மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
உங்கள் வரி பணம் எல்லாம் இந்த வந்தேறிகள் அனுப்பவித்து கொண்டு இந்தியாவை நாசம் செய்ய கிளம்பிட்டாங்க…

விரிவான விளக்கம்
பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் பாஜக எதிர்ப்பு வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு, போலி வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன் காரணமாக மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறி வசிக்கும் ரோஹிங்கியா, வங்கதேச இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்தி வருவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது খবর সারাদেশ என்ற பேஸ்புக் பக்கத்தில், பரவி வரும் வீடியோ செப்டம்பர் 15 அன்று பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் இன்றைய போராட்டத்தின் காட்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் பணியை இந்தியத் தேர்தல் ஆணையம் 2025 அக்டோபர் இறுதியில்தான் அறிவித்தது. ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்த போது, bioவில் தான் ஒரு பத்திரிக்கையாளர் என்றும், வங்கதேசத்தில் உள்ள டாக்கா பகுதியில் வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே வங்கதேசத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருவதால், இந்த வீடியோவும் அங்கு எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மீண்டும் தேடலை தொடங்கினோம்.

அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் சமூக ஊடகத்தில் பலரும் இந்த வீடியோவை செப்டம்பர் 15 அன்று பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் வங்கதேசத்தின் ஃபரித்பூரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டு, Awami League என்ற hastag பயன்படுத்திருந்ததையும் பார்க்கமுடிந்தது.

இது குறித்து ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிய போது, குறிப்பிட்ட அந்த நாளில் வங்கதேசத்தில் அவாமி லீக்குக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டதாக வங்கதேச ஊடகங்களில் வெளியான செய்திகள் வெளியாகிருந்ததை பார்க்கமுடிந்தது.

முடிவு:
எனவே, பரவி வருவது வங்கதேசத்தில் 2025 செப்டம்பரில் நடந்த பேரணி ஒன்றின் வீடியோவாகும். இதை மேற்கு வங்கத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.