யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு கடற்பகுதியில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் கொட்டப்படுவதாக பரவும் வீடியோ 99.6% AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
பரவிய செய்தி
தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பை தொட்டியா? தமிழக அரசு என்ன செய்துகொண்டுயிருக்கிறது.

விரிவான விளக்கம்
கேரளாவிலிருந்து தமிழக எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகள், மிகவும் ஆபத்தான குப்பைகள் கொட்டுவது நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது இப்படி கொட்ட வரும் வாகனங்களை தமிழ்நாடு அரசு பறிமுதல் செய்து, வாகனங்களை ஓட்டி வருபவர்களைக் கைது செய்து வருகிறது. இந்நிலையில், "தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பை தொட்டியா", என கூறி, 1 நிமிடம் மூன்று வினாடிகள் கொண்டு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்க்கையில், சமூகவலைத்தளங்களில் இந்த காணொளி வைரலாகி வருவதைக் காண முடிந்தது. அதில் தமிழ்நாடு அல்லது எந்த இடம் என்பது தெளிவாகக் குறிப்பிடவில்லை. இதையடுத்து அந்த காணொளியில் Ali Aboutine என்ற water mark ஒன்றைக் காணமுடிந்தது.

இதன் அடிப்படையில், Ali Aboutine என்ற இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களைப் பார்க்க முடிந்தது. அதில் தேடிய போது "When will they stop destroying marine life? This is NOT okay!" என்ற தலைப்பில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், இந்த காணொளி ஏப்ரல் 1 ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.
இது மட்டுமல்லாமல் கப்பல் மூலம் கடல்களில் கழிவுகளைக் கொட்டுவது போன்ற பல காணொளிகளும், மிகவும் வித்தியாசமான பல்வேறு காணொளிகளையும் பார்க்க முடிந்தது.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் Bio-வை பார்த்த போது, அதில் "Digital Creator", "AI Artist" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடலில் குப்பை கொட்டப்படுவது போன்ற ஏராளமான காணொளிகள் AI மூலம் உருவாக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் பரவி வரும் காணொளியின் உண்மை தன்மையை அறிய, “Hive Moderation” இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில் தமிழ்நாடு கடற்பகுதியில் கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் கொட்டப்படுவதாகப் பரவும் காணொளி 99.6% AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

முடிவு :
தமிழ்நாடு கடற்பகுதியில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் கொட்டப்படுவதாக பரவும் வீடியோ போலியானது.