யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ மே 2021ல் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும். இதை தற்போது நடப்பது போல் செய்தி ஊடகங்கள் தவறாக பரப்பி வருகின்றன.
பரவிய செய்தி
Claim 1 :
பாக். பிரதமர் வீட்டின் அருகே குண்டு வெடிப்பு? பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் வீட்டின் அருகே பெரிய குண்டு வெடிப்பு நடைபெற்றதாக தகவல். பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீர் வீட்டின் அருகிலும் குண்டு வெடிப்பு என தகவல்

Claim 2 :
ஜெய்சால்மரில் பாகிஸ்தான் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய இந்தியா

Claim 3 :
பாகிஸ்தான் Drones அட்டாக்! சுட்டு வீழ்த்திய இந்தியா! பரபரப்பு காட்சி! | Pak Drones vs Indian Army

விரிவான விளக்கம்
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, 13 நாள்கள் கழித்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீர் வீட்டின் அருகிலும் குண்டு வெடிப்பு நடைபெற்றதாக தந்தி டிவி நியூஸ் கார்ட் ஒன்றை வெளியிட்டது. அதே போல் பாகிஸ்தான் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய இந்தியா என்று News18 Tamilnadu, ABP Nadu, Puthiyathalaimurai உள்ளிட்ட ஊடகங்களும் வீடியோ ஒன்றை வெளியிட்டுயிருந்தது.
உண்மை என்ன?
ஊடகங்களில் வெளியான வீடியோ குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது NSF Channel என்ற யூடியூப் பக்கத்தில் ஊடகங்களில் வெளியான வீடியோ பதிவாகியிருந்ததை காண முடிந்தது. "Israel Iron Dome in action *Recorded Alarm*" என்ற தலைப்பில் இந்த வீடியோ, 11 மே 2021 அன்று வெளியாகியிருந்தது. அதில் குடியிருப்புகள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தும் காட்சி இடம்பெற்றிருந்தது.
மேலும் அந்த பக்கத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் என்ற தலைப்பில் ட்ரோன் மூலம் தாக்கும் காட்சிகள் குறித்த வீடியோக்கள் இடம்பெற்றிருந்ததை காணமுடிந்தது.
இது குறித்து மேலும் தேடி பார்த்ததில் Tech XYZ HD என்ற யூடியூப் பக்கத்தில் Israel's Air Defense Systems in Action - Iranian Attack (April 2024) என்ற தலைப்பில் ஏப்ரல் 14, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
எனவே இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்திய வீடியோவை, தற்போது பாகிஸ்தானில் நடப்பது போல் செய்தி ஊடகங்கள் தவறாக பரப்பி வருகின்றன.
முடிவு :
செய்தி ஊடகங்கள் மக்கள் பக்கம் இருந்து உண்மை பேசுவதை மறந்து, இது போன்ற பழைய வீடியோக்களையும், போலி வீடியோக்களையும் வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.