யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் கொலைக் குற்றவாளி ஒருவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனை, அவரது கூட்டாளிகள் சாலையில் ஊர்வலமாக சென்று ஆயுதங்களுடன் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் நாசிக் பகுதியைச் சேர்ந்த காவலர்கள் சம்பவத்தில் தொடர்புடைய 21 பேரை கைது செய்து, அவர்களை பொது மக்கள் பார்க்கும் வகையில் ஊர்வலமாக, அடித்து இழுத்துச் சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
குர்லாவில் எல்.பி.எஸ் மார்க்கில் வலுக்கட்டாயமாக போக்குவரத்தை நிறுத்தி, வாகனங்களில் "ஐ லவ் முகமது" என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிய முஸ்லிம் ஜிஹாதிகளுக்கு மும்பை காவல்துறை *"சரியான சிகிச்சை"* அளிக்கிறது

விரிவான விளக்கம்
கடந்த வாரம் மும்பையின் குர்லா பகுதியில் இஸ்லாமியர்கள் சிலர் சாலையில் வரும் வாகனங்களில் ‘I love Muhammad’ என்று எழுதப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
இந்நிலையில் இச்செயலில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை மும்பை போலீசார் கைது செய்து சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் வீடியோ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது ABP MAJHA ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், “Nashik Police Action: After being released from jail, they took out a procession, but the police caught them again and beat them up” என்ற தலைப்பில் அக்டோபர் 10 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து இது குறித்து keywords மூலம் கூகுளில் தேடினோம். Times of India ஊடகப்பக்கத்தில் “Nashik police arrest 17 for rally after murder accused gets bail” இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் கொலைக் குற்றவாளி ஒருவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிகழ்வை அவரது கூட்டாளிகள் சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டாடியுள்ளனர். அப்போது கையில் ஆயுதங்களுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இவற்றையெல்லாம் வீடியோவாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளனர். இதனால் நாசிக் பகுதியைச் சேர்ந்த காவலர்கள் சம்பவத்தில் தொடர்புடைய 21 பேரை கைது செய்து, அவர்களை பொது மக்கள் பார்க்கும் வகையில் ஊர்வலமாக, அடித்து இழுத்துச் சென்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து இது குறித்து தேடுகையில், Free Press Journal, News18 India போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் இச்சம்பவம் குறித்து ஊடகங்களில் வந்த செய்தியை நாசிக் போலீசார் அவர்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதையும் காண முடிந்தது.
முடிவு:
கிடைத்த ஆதரங்களின் அடிப்படையில், மும்பையில் வாகனங்களில் ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்ததாக பரவும் வீடியோ தவறானதாகும். பரவி வருவது நாசிக்கில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்றவர்களை போலீசார் கைது செய்த வீடியோவாகும்.