யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ கடந்த 2024 மார்ச் மாதம் பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் கோசி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் இடிந்து விழுந்த போது எடுக்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பிஹாரில், சுபால் மற்றும் மதுபானி மாவட்டங்களை இணைக்கும் கோசி ஆற்றின் குறுக்கே ரூ. 1200 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தினால் பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், படுகாயமடைந்துள்ளதாகவும், சிலர் இறந்ததாகவும் தகவல்கள் வருகிறது.
சோழ பேரரசர்களான ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோரின் பிரம்மாண்டமான சிலைகள் தமிழகத்தில் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.

விரிவான விளக்கம்
சமீபத்தில் கடந்த ஜூலை 9ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து குஜராத்தில் மட்டுமல்ல மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் சமீப காலமாக பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், 25 நொடிகள் நீளமுள்ள இந்த வீடியோவில், ‘பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழந்து கிடக்கிறது. அதற்கு மேல் கட்டுமான இயந்திரம் ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. இடிந்த இந்த பாலத்தின் மேலே சிலரும் கீழே சிலரும் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்’. இந்த வீடியோவின் பின்னணியில் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர், ‘நிறைய பேர் உயிரிழந்திருக்கலாம். எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் இந்த பாலத்தின் மேலடுக்கு கீறலால் உடைந்து அது கீழடுக்கின் மீது விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும்’ கூறிகிறார்.
இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பிகார் மாநிலத்தில் ரூ. 1200 கோடி செலவில் கட்டப்பட்ட வரும் பாலம் இடிந்து விழந்ததாகவும்; அங்கே பிகாரில் பாலம் இடிந்து விழுந்து கொண்டிருக்கையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு பிரம்மாண்டமான சிலைகள் அமைக்கப்படவிருப்பது பற்றி அறிவிப்பு செய்துகொண்டிருக்கிறார்’ என்றும் பரப்பப்படுகிறது.
डबल इंजन की सड़ कार है भ्रष्टाचार की लीला अपरंपार है। बिहार में सुपौल-मधुबनी के बीच कोसी नदी पर 1200 करोड़ की लागत से निर्माणाधीन पुल गिरा। जिसमें कई श्रमिकों के दबने, घायल एवं मृत्यु होने की सूचना है।
#नहींचाहिएभाजपा pic.twitter.com/JpXjTydEm8
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘News 18 Bihar Jharkhand’ என்ற யூடியூப் தளத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது. 2024 மார்ச் 22ஆம் தேதியன்று ‘Supaul Bridge Collapse’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், பரப்பப்படும் வீடியோவில் உள்ள அதே இடிந்து சேதமடைந்த பாலத்தை காண்கிறோம்.
இதில் இந்த ‘Supaul Bridge Collapse’ என்பதை அடிப்படையாகக் கொண்டு மேலும் தேடுகையில், ‘The Hindu' செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது. இந்த செய்தியில், ‘ 2024 மார்ச் 22ஆம் தேதியன்று காலையில் பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் கோசி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் 9 பேர் காயமடைந்து உள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து பரப்பப்படும் வீடியோவில் உள்ள சம்பவம் ஓராண்டுக்கு முன்பே நடந்தது என்பது உறுதியாகிறது.
முடிவு:
ஓராண்டுக்கு முன்னால் பிகார் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது சமீபத்தில் நடந்ததாக திரித்துப் பரப்புகிறார்கள்.