யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல. வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது. முழு வீடியோவில், சிறுவனின் பலூன்களை உடைக்கும் அதே நபர், அந்த சிறுவனிடம் அனைத்து பலூன்களுக்கான பணத்தையும் (1000 டக்கா ) கொடுத்து வீட்டிற்கு செல்லுமாறு கூறுகிறார். அந்த சிறுவன் வீடியோவின் இறுதியில் சிரிப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.
பரவிய செய்தி
கர்நாடகாவில் தொப்பி அணிந்து பலூன் விற்கும் சின்னஞ்சிறு முஸ்லிம் சிறுவனின் பலூன்களை உடைத்து கீழே தள்ளும் அளவுக்கு என்னடா உங்களுக்கு அவ்வளவு வெறி. பாசிசத்தை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் இந்த நாய் போன்ற தீவிரவாதிகளை தான் உருவாக்குகிறீர்கள்

விரிவான விளக்கம்
கர்நாடகாவில் இஸ்லாமிய சிறுவன் விற்றுக்கொண்டு இருக்கும் பலூன்களை ஒரு நபர் உடைக்கிறார் என்று கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கர்நாடகா வில் தொப்பி அணிந்து பலூன் 🎈 விற்கும் சின்னஞ்சிறு முஸ்லிம் சிறுவனின் பலூன்களை உடைத்து கீழே தள்ளும் அளவுக்கு என்னடா உங்களுக்கு அவ்வளவு வெறி.
பாசிசத்தை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் இந்த நாய் 🐕 போன்ற தீவிரவாதிகளை தான் உருவாக்குகிறீர்கள். pic.twitter.com/mzb79z8hhU
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் உண்மையான வீடியோ குறித்து தேடினோம். அப்போது Amazing Collection 24 என்ற வங்கதேசத்தை சேர்ந்த பேஸ்புக் பக்கத்தில், “You will be surprised to see what ultimately happened to the little boy” என்று குறிப்பிட்டு ஜனவரி 12 அன்று 2:11 நிமிடங்கள் கொண்ட முழு வீடியோவும் பதிவாகியிருந்தது. அதில் இருவரும் Bengali மொழியில் பேசுவதை தெளிவாக கேட்கமுடிந்தது.
இதையடுத்து அந்த வீடியோவை முழுமையாக பார்க்கையில், சிறுவன் விற்றுக்கொண்டு இருக்கும் பலூன்கள் அனைத்தையும் அந்த நபர் உடைக்கிறார். பிறகு அந்த நபர் சிறுவனிடம் வயதைப் பற்றி கேட்பதைக் காணலாம். சிறுவன் "12 வயது" என்று பதிலளித்தான். பின்னர் அந்த நபர், "இந்த நேரத்தில் நீங்கள் விளையாட வேண்டும், நீங்கள் படிக்க வேண்டும், ஏன் பலூன்களை விற்கிறீர்கள்? நீங்கள் படிக்கவில்லையா?" என்று கேட்கிறார். உடனடியாக சிறுவன், "இல்லை, நான் படிக்கவில்லை" என்று கூறுகிறான். இதையடுத்து உடைத்த பலூன்களின் விலையை கேட்ட அந்த நபர், 1000 டக்கா பணத்தையும் கொடுத்துவிட்டு படிக்க வேண்டும் என்று கூறுகிறார். பணத்தைப் பெற்ற பிறகு, சிறுவன் சிரிப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.
இது குறித்து மேலும் தேடிப் பார்க்கையில், The Dhaka என்ற பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அந்த பக்கத்தில் பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்தது பார்க்கமுடிந்தது. அதே போல் அந்த பக்கத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள சிறுவன், பல வீடியோக்களில் இருப்பதையும் பார்க்கமுடிந்தது. இதிலிருந்து பரவி வரும் வீடியோ, Scripted என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, பரவி வரும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது. வீடியோ இருக்கும் காட்சி இந்தியாவில் நடந்ததாகவும், வகுப்புவாதத்தை தூண்டும் விதமாகவும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.