யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு மதுரையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டவர்களின் கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி என்று ஒரு புகைப்படம் தவறாக பரப்பப்படுகிறது. இது குஜராத் மாநிலத்தின் ஹன்சல்பூர் என்ற இடத்தில், மாருதி சுசூகி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதை காட்சிபடுத்தும் புகைப்படம் ஆகும்.
பரவிய செய்தி
தளபதி விஜய்யோட மதுரை மாநாடு Car Parking
தளபதி எப்போவுமே மாஸ் தான் @TVKVijayHQ
#தமிழகவெற்றிக்கழகம்

விரிவான விளக்கம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய் உரையாற்றினார். இந்நிலையில் மதுரை மாநாட்டின் கார் பார்க்கிங் என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
தளபதி விஜய்யோட மதுரை மாநாடு Car Parking 🔥🔥🔥
தளபதி எப்போவுமே மாஸ் தான் @TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/4EXKb44Eq4
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது Garvi Takat என்ற குஜராத் ஊடகத்தில், “குஜராத்தில் உள்ள மாருதி சுசூகி கப்பல் கட்டும் தளத்தில் ஆயிரக்கணக்கான கார்களைக் காட்டும் வான்வழி வீடியோ வைரலாகிறது” என்ற தலைப்பில் பரவி வரும் புகைப்படத்துடன் ஆகஸ்ட் 26ஆம் தேதி செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் ஹன்சல்பூரில் உள்ள நிறுவனத்தின் ஸ்டாக்யார்டில் ஆயிரக்கணக்கான மாருதி சுசூகி கார்கள் வரிசையாக நிற்பதைக் காட்டும் வான்வழி வீடியோ வைரலாகி வருவதாகவும், இது இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியின் பரந்த அளவை காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஹன்சல்பூர் ஆலை, குஜராத்தில் உள்ள மாருதி சுசுகியின் முக்கிய உற்பத்தி நிலையமாகும் என்றும், இது ஆண்டுக்கு 7,50,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தேடிய போது, The Print ஊடகம் தனது யூடியூப் பக்கத்திலும், இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் வீடியோவில் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் குஜராத்தில் உள்ள மாருதி சுசூகியின் ஸ்டாக்யார்டின் வான்வழி காட்சி என்றும், பிரதமர் மோடி இதை திறந்து வைத்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போல் India Today, India TV போன்ற ஊடகங்களில் இது தொடர்பாக செய்தி வெளியாகியிருந்ததை பார்க்க முடிந்தது.

முடிவு:
நம் தேடலில், பரவி வருவது குஜராத் மாநிலத்தின் ஹன்சல்பூர் என்ற இடத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதை காட்சிப்படுத்தும் புகைப்படம் ஆகும். இதை த.வெ.க மாநாட்டின் கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி என்று தவெகவினர் தவறாக பரப்பி வருகின்றனர்.