யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அலகாபாத் உயர்நீதிமன்றம், 16 செப்டம்பர் 2025 அன்று “Praveen Chetri vs State of UP” என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே, தற்போது உத்தரபிரதேச அரசு, காவல் பதிவுகள், வாகனங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து சாதிக் குறிப்புகளை நீக்குமாறு 10 அம்ச உத்தரவை பிறப்பித்துள்ளது.
பரவிய செய்தி
உத்தரப்பிரதேசத்தில் ஜாதி பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நடத்த தடை விதித்துள்ளது அம்மாநில அரசு. அதே போல் ஜாதி அடிப்படையிலான சமூக ஊடக பதிவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜாதியை பெருமைப்படுத்தும் பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை எங்கும் வைக்கக் கூடாது வேண்டும் உத்தரவிட்டுள்ளது என்பதோடு காவல் நிலைய ஆவணங்களிலும் ஜாதி குறித்த பதிவுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து, கடைபிடிக்க உத்தரவிட ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன் வருவாரா?

விரிவான விளக்கம்
உத்தரப்பிரதேசத்தில் சாதி பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நடத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளதாகவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் கூறி பாஜக சார்பில் பதிவி ஒன்று வைரலாகி வருகிறது. மேலும் அதில் சாதியை பெருமைப்படுத்தும் பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை எங்கும் வைக்கக்கூடாது என்றும், காவல் நிலைய ஆவணங்களிலும் சாதி குறித்த பதிவுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே போன்று உத்தரவை தமிழ்நாட்டில் பிறப்பிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் வருவாரா என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டிருந்தது.
உத்தரப்பிரதேசத்தில் ஜாதி பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நடத்த தடை விதித்துள்ளது அம்மாநில அரசு. அதே போல் ஜாதி அடிப்படையிலான சமூக ஊடக பதிவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜாதியை பெருமைப்படுத்தும் பதாகைகள்,…
உண்மை என்ன?
முதலில் உத்திர பிரதேசத்தில் இந்த தடையை அம்மாநில அரசு தான் பிறப்பித்ததா என்பது குறித்து தேடிப் பார்த்தோம். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகப்பக்கத்தில் செப்டம்பர் 23, 2025 அன்று ”UP caste-based rallies banned: The HC ruling behind the state govt order” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் கடந்த 2023ல் தொடரப்பட்ட “Praveen Chetri vs State of UP” என்ற வழக்கு தொடர்பான FIR-களில் கைது செய்யப்பட்டவர்களின் சாதி குறித்து காவல்துறையினர் குறிப்பிட்டிருந்ததாகவும், சாதி குறித்த விவரங்கள் தேவையற்றது என்று குறிப்பிட்டு அலகாபாத் உயர்நீதிமன்றம், சில விதி விலக்குகளுடன் உத்தரவு பிறப்பித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் அனைத்து தனியார் மற்றும் பொது வாகனங்களிலும் சாதி அடிப்படையிலான கோஷங்கள் மற்றும் சாதி அடையாளங்களை வெளிப்படையாகத் தடை செய்ய வேண்டும் என்றும், மாநிலத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயருக்கு எதிராக ஒரு சாதியை குறிப்பிடும் இடம் உள்ளது, அதை உடனடியாக நீக்கி உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பின் அடிப்படையிலையே, உத்தரபிரதேச அரசு காவல் பதிவுகள், வாகனங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து சாதிக் குறிப்புகளை நீக்குமாறு 10 அம்ச உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதே போல் Live Law ஊடகப்பக்கத்திலும், செப்டம்பர் 22, 2025 அன்று இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகளுக்கு தடை விதித்து, காவல் பதிவுகள், வாகனங்களில் இருந்து சாதி குறிப்புகளை நீக்க வேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், உத்திர பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு :
எனவே அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான் உத்தரபிரதேச அரசு காவல் பதிவுகள், வாகனங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து சாதிக் குறிப்புகளை நீக்குமாறு 10 அம்ச உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை அம்மாநில அரசே உத்தரவு பிறப்பித்தது போல் தவறாக திரித்து பரப்புகின்றனர்.