யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இவ்வீடியோ செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
வானில் இருந்து விழுந்து விபத்திற்குள்ளான பறக்கும் தட்டு! அடையாளம் தெரியாத பறக்கும் சாதனத்தை இப்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்களாம்! உள்ளே இருப்பவர்களை பிடித்து விசாரித்தால் பல உண்மைகள் தெரிய வரலாம்!

விரிவான விளக்கம்
ஏலியன், வேற்று கிரக வாசிகள் பற்றிப் பல கதைகள் உள்ளன. மற்ற கோள்களில் உயிரினம் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆராய்ச்சியாளர்களும் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், வானிலிருந்து பறக்கும் தட்டு ஒன்று விழுந்ததாகவும் அதனை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவில் காட்டப்படும் பறக்கும் தட்டு வெவ்வேறு வடிவத்தில் இருப்பதைக் காண முடிகிறது. இதன் அடிப்படையில் வீடியோவின் கீஃப்ரேம்களைக் கொண்டு கூகுள் லென்ஸ் உதவியுடன் இது குறித்துத் தேடினோம்.
’ஜிதேந்திர சிங்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘sybervisions_’ என்ற வாட்டர் மார்க் இடம்பெற்றிருந்தது. அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வீடியோ கடந்த டிசம்பர் 31ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.

அதில், அப்பக்கத்தை நிர்வகிப்பவர் தான் ஒரு ‘AI-VFX artist’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பறக்கும் தட்டு, ஏலியன் எனப் பல வீடியோக்களை அவர் பதிவிட்டுள்ளார். அவை அனைத்தும் AI மற்றும் VFX உதவியுடன் உருவாக்கப்பட்டதுதான்.
sybervisions_ பக்கத்தில் உள்ள மற்ற பறக்கும் தட்டு வீடியோக்கள்
இந்த வீடியோ AI உதவியுடன் உருவாக்கப்பட்டது என ‘Raketa’ இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல்களிலிருந்து இது விண்ணிலிருந்து விழுந்த பறக்கும் தட்டு கிடையாது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
முடிவு:
வானத்திலிருந்து விழுந்து விபத்திற்குள்ளான பறக்கும் தட்டை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டது.