யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அடல் சுரங்கப்பாதை நுழைவாயில் சேதமடைந்ததாகப் பரவும் வீடியோ துருக்கியில் எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
விண்வெளி தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட அடல் சுரங்கத்துடன் கூடிய ரோடும் ஸ்வாஹா.
விரிவான விளக்கம்
இமாச்சலப்பிரதேசத்தில் மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் அடல் சுரங்கப் பாதையைப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர், 2020ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.

Facebook Link
இந்த சுரங்கப்பாதையின் நுழைவுவாயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை பெரும் சேதம் அடைந்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் திமுகவினரால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசின் 7 திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஒன்றிய தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியது எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசுபொருளானது. இத்தகைய நிகழ்வுகளுடன் ஒப்பிடும் வகையில்தான் அடல் சுரங்கப்பாதையின் நுழைவாயில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக வீடியோ பகிரப்படுகிறது.
பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், இதுதொடர்பாகத் துருக்கி மொழியில் இயங்கக்கூடிய தளத்தில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் செய்திகள் வெளியாகியிருப்பதைக் காணமுடிந்தது.
அச்செய்திகளைக் கூகுள் மொழிபெயர்ப்பு உதவியுடன் மொழிபெயர்த்துப் படித்ததில், துருக்கி நாட்டில் Ordu என்ற பகுதியில் தொடர்ந்து 3 நாட்கள் அதிகனமழை பெய்துவந்த நிலையில் Black Sea - Mediterranean சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது.

இதுதொடர்பான ’Haberler’, ‘Turkgun’ போன்ற தளங்களில் வீடியோவுடன் செய்திகள் வெளியாகியுள்ளது. இவற்றில் இருந்து இச்சம்பவம் துருக்கியில் நடந்தது என்பதை அறியமுடிகிறது. இதனை அடல் சுரங்கப்பாதை எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு:
அடல் சுரங்கப்பாதையின் நுழைவாயில் பெரும் சேதம் அடைந்ததாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது கடந்த ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சேதமடைந்த சாலையுடன் தொடர்புடைய வீடியோ.