யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தியில் மாநிலத்தின் பெயர் எங்கு இடம்பெற வேண்டும் மற்றும் எந்த மொழிகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும் போன்ற விதிமுறைகள் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தால் விதிக்கப்படும். அதன்படியே தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியின் முன்பக்கத்தில் ஹிந்தியிலும், பின்புறத்தில் ஆங்கிலத்திலும், ஊர்தியின் இருபுறங்களிலும் தமிழ் மொழியிலும் "தமிழ்நாடு" என்று எழுதப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நாடு முழுவதும் 77ஆவது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சார்பில், இயக்கப்பட்ட அலங்கார ஊர்தியில், ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர்கள் அடக்குவது போன்ற முகப்பு காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் அலங்கார வாகனத்தின் இருபுறமும் கலைஞர்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம் ஆடியபடி சென்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஊர்தி
தமிழ் இல்லாமல் இந்தி.
😡😡😡😡.#StopHindiImposition pic.twitter.com/MgiSf2xAOg
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து முதலில் தேடினோம். அப்போது தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை டெல்லி குடியரசு தின விழா தமிழ்நாடு அலங்கார ஊர்தி என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தது. அதில் அலங்கார ஊர்தியின் இடது புறத்தில் தமிழ் மொழியில் "தமிழ்நாடு" என்று குறிப்பிட்டுருந்ததை தெளிவாக காணமுடிந்தது.
அதே போல் PIB in Tamil Nadu எக்ஸ் பக்கத்தில் 77-வது குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் அலங்கார ஊர்தி இடம்பெற்றது என்று குறிப்பிட்டு, அதன் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தது. அதில் ஊர்தியின் இருபுறங்களிலும் தமிழ் மொழியிலும் "தமிழ்நாடு" என்று எழுதப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
🇮🇳 #RepublicDay
👉🏼 77-வது குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் அலங்கார ஊர்தி இடம்பெற்றது.@MIB_India @PIB_India pic.twitter.com/PAxsbLhyKk
அதே போல் அலங்கார ஊர்தியின் முழு வீடியோவையும் பார்க்கையில், முன்புறம் இந்தியிலும், பின்புறம் ஆங்கிலத்திலும், இருப்பக்கங்களில் தமிழிலும் தமிழ்நாடு என்று எழுதப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது.
இதையடுத்து அலங்கார ஊர்தி முகப்பில் இந்தி மொழி எழுதிருக்குறத பத்தி தேடிப் பார்த்தோம். அப்போது 2026 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்புக்கு அலங்கார ஊர்திகள் தேர்வு செய்வது தொடர்பாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகளை பார்க்கமுடிந்தது. அதில் சரியாக 3வது பக்கத்தில Preparation of Sketch/Design என்று குறிப்பிட்டு, அலங்கார ஊர்தியை வழங்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர் முன்புறம் இந்தி மொழியிலும், பின்புறம் ஆங்கிலத்திலும், பக்கவாட்டுகளில் பிராந்திய மொழியில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்விதிமுறைபடி, தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியின் இருபுறங்களிலும் தமிழ் மொழியில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளது.

முடிவு:
குடியரசுதின அணிவகுப்பில் அலங்கார ஊர்தியில் தமிழ் மொழி இல்லாமல் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை. குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தியில் மாநிலத்தின் பெயர் எங்கு இடம்பெற வேண்டும் மற்றும் எந்த மொழிகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும் போன்ற விதிமுறைகள் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தால் விதிக்கப்படும். அதன்படியே தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியின் முன்பக்கத்தில் ஹிந்தியிலும், பின்புறத்தில் ஆங்கிலத்திலும், ஊர்தியின் இருபுறங்களிலும் தமிழ் மொழியிலும் "தமிழ்நாடு" என்று எழுதப்பட்டுள்ளது.
