யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணை இருசக்கர வாகனத்தில் இடித்துவிட்டு சென்ற மூன்று இளைஞர்களின் கால்களை காவல்துறையினர் மூலம் உடைத்து, அவர்களுக்கு மருத்துவமனையில் வீல் சேர் கூட கொடுக்க விடாமல் செய்தார் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
செகாப், அப்சல் மற்றும் ஃபைசல் மூவரும் உத்தரபிரதேசத்தில் பைக்கில் ஒரு பெண்ணை பைக்கில் இடித்து விட்டு தப்பிச்சென்றனர். 24 மணிநேர்தில் மடக்கிய காவல்துறையினரை புல்லட்டை விட்டு ஏற்றி கால்களை உடைத்க சொன்ன யோகி ஜீ, அவர்களுக்கு வீல் சேர்கூட வழங்கவில்லை, மருத்துவ மனையில் சேர்த்தார்.
விரிவான விளக்கம்
உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணை இருசக்கர வாகனத்தில் இடித்துவிட்டு சென்ற செகாப், அப்சல் மற்றும் ஃபைசல் என்ற மூன்று இளைஞர்களின் கால்களை காவல்துறையினர் மூலம் உடைத்து, அவர்களுக்கு மருத்துவமனையில் வீல் சேர் கூட கொடுக்க விடாமல் செய்தார் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
यूपी में अफजल फेसैल सादाब। 72 हूरों के आशिको ने साइकिल से स्कूल जा रही लड़की से छेड़ छाड़ बलात्कार की कोशिश की
— 🇮🇳ɴʏʟᴀʜ ʙᴀʟᴏᴄʜ🇮🇱 (@NYLAHBALOCH) August 28, 2024
योगी बाबा ने टांगे ही तोड़ दी किसी के लायक नही छोड़ा pic.twitter.com/bUUVvYL9gn
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை “Google Reverse Image Search” மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.
“First India News” யூடியூப் பக்கத்தில், 18 செப்டம்பர் 2023 அன்று பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். வீடியோவில், “பரத்பூரில் அஜய் ஜம்ரி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இவர்கள் என்றும், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்றதால் என்கவுண்டரின் போது காவல்துறையால் காலில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டனர்” என்றும் செய்தி தொகுப்பாளர் வீடியோவில் கூறுவதைக் காண முடிகிறது.
இதே போன்று 'Dainik Bhaskar' ஊடகப் பக்கத்திலும், பரவி வரும் வீடியோவில் உள்ள மூன்று இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் போன்ற வீடியோவைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “ராஜஸ்தானில் ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை, பரத்பூரில் அஜய் ஜம்ரி (23) என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையை செய்த மூன்று மர்மநபர்கள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், காவல்துறையினர் குற்றவாளிகளை சுற்றி வளைத்துப் பிடித்தனர்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் பரவி வரும் வீடியோ ராஜஸ்தானின் பரத்பூரில் நடந்த அஜய் ஜம்ரி கொலை வழக்கோடு தொடர்புடைய வீடியோ என்பது உறுதியாகிறது.
மேலும் உத்தரப்பிரதேசத்தில், பரவி வரும் செய்திகளில் குறிப்பிட்டுள்ளவாறு ஏதாவது சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தோம். 17 செப்டம்பர் 2023 அன்று “NDTV“ ஊடகப் பக்கத்தில், “உத்திரபிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் 17 வயது இளம்பெண் தனது தோழிகளுடன் பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பட்டாவை இழுத்ததால் விபத்தில் உயிரிழந்தார். குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் ஃபைசல், ஷாபாஸ் மற்றும் அர்பாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மூவரையும் கைது செய்தனர்” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் புகைப்படங்களுடன், பரவி வரும் வீடியோவில் உள்ள மூன்று நபர்களையும் ஒப்பிட்டு, இரண்டிலும் இருப்பவர்கள் வேறு வேறு நபர்கள் என்பதை முடிவு செய்தோம்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 17 வயது இளம்பெண்ணின் துப்பட்டாவை இழுத்து கைது செய்யப்பட்ட ஃபைசல், ஷாபாஸ் மற்றும் அர்பாஸ் ஆகிய மூன்று இளைஞர்களை, ராஜஸ்தான் கொலை சம்பத்தோடு தொடர்புடைய வீடியோவோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், உபியில் இளம்பெண்ணை தாக்கிய மூவருக்கு தண்டனை கொடுத்த யோகி ஆதித்யநாத் என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ, ராஜஸ்தான் கொலைவழக்கோடு தொடர்புடையது என்பதை அறிய முடிகிறது.
