யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2024 ஏப்ரம் மாதம் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் சகாரன்பூரில் ரோடு ஷோ சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
பீகாரில் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூடிய இலட்சக்கணக்கான மக்கள்.


விரிவான விளக்கம்
பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இதில் முதல் கட்டத்திற்காக தேர்தல் பிரச்சாரம் நவம்பர் 4ஆம் தேதியோடு முடிந்தது.
இந்நிலையில், ’நகரத்தின் தெரு ஒன்றில் மிகப்பெரும் அளவில் மக்கள் திரண்டிருக்க, அவர்களுக்கு மத்தியில் காரில் செல்லும் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்’ வீடியோவை பதிவிட்டு, இது பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரச்சாரத்திற்காக பிரியங்கா காந்தி வந்தபோது கூடிய கூட்டம் என்று சமூக வலைத்தளங்களில், INDIA கூட்டணி ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
பீகாரில் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூடிய இலட்சக்கணக்கான மக்கள். pic.twitter.com/DGUsEZbnEI
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ, ‘காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சகாரன்பூர் என்ற நகரத்தில் ரோடு ஷோ சென்றபோது எடுக்கப்பட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
सहारनपुर में कांग्रेस महासचिव श्रीमती @priyankagandhi जी के 'रोड शो' की एक झलक।
ये विशाल जनसमर्थन आने वाले बदलाव की दस्तक है, अन्याय और तानाशाही के खिलाफ न्याय की हुंकार है।
📍 उत्तर प्रदेश pic.twitter.com/eiXsWToCtB
காங்கிரஸ் கட்சியின் யூடியூப் தளத்திலும் இந்த வீடியோ, சகாரன்பூரில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ சென்றபோது எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து, இந்த வீடியோ பீகாரில் அல்ல உத்தர பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த வீடியோ ஓராண்டிற்கும் முன்பே எடுக்கப்பட்டது என்பதும் பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் தெரியவருகிறது.
முடிவு:
ஓராண்டிற்கு முன்னால் உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போது பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு எடுக்கப்பட்டதாக தவறாக பரப்பப்படுகிறது.