
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
மேலும் பரவி வரும் வீடியோவில், செய்தி தொகுப்பாளர் ஒருவர், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள எவருக்கும் உ.பி. அரசு மானியங்கள் அல்லது சலுகைகளை வழங்காது, அரசு வேலைகள் வழங்காது, அவர்களுக்கு ஓட்டு உரிமைகள் கூட கொடுக்காது என்று கூறுவதைக் காணமுடிகிறது.
உத்திரப்பிரதேச அரசின் புதிய சட்டம்...
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் கிடைக்காது.
அரசு வேலையும் கிடைக்காது.
யோகிஜியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம். pic.twitter.com/qHnfy5IdDK
— Suresh நீலகண்டன்.2 (@Suresh33737771) June 6, 2024
#BreakingNews
உத்திரப்பிரதேச அரசின் புதிய சட்டம்...
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் கிடைக்காது.
அரசு வேலையும் கிடைக்காது.
யோகிஜியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.
— OmSaranadevendiran Single #JaiBharat (@OmSaranadeven) June 6, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், Business Standard ஊடகம் இதுகுறித்து, 'No govt job, subsidy if over two children: UP population control draft bill' என்ற தலைப்பில் 2021 ஜூலை 10 அன்று செய்தி வெளியிட்டிருந்ததைக் காணமுடிந்தது.
அதில், "இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவோ, அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கவோ, மானியம் பெறவோ தடை விதிக்கப்படும் என்று உ.பி. சட்ட ஆணைய இணையதளத்தில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு மசோதா வரைவு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 19ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படும்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் பரவி வரும் வீடியோவின் முழு பகுதி, Republic Bharat யூடியூப் பக்கத்தில் 2021 ஜூலை 11 அன்று வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் வீடியோவை முழுமையாக கேட்டதில் செய்தி தொகுப்பாளர் இந்தத் திட்டத்தின் வரைவு (Draft) குறித்தே விவாதித்திருக்கிறார்.
இதே போன்று ABP News ஊடகப் பக்கத்திலும் பரவி வரும் இச்செய்தி குறித்து, 'உ.பி.யில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் எப்போது வரும்? பதிலளித்த யோகி ஆதித்யநாத்!" என்ற தலைப்பில் 2021 செப்டம்பர் 22 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அக்கட்டுரையில், "தற்போது நம்முன் உள்ள சவால் தாய் இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான். இதற்காக மக்கள்தொகை கொள்கையின் கீழ் விரிவான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம். எதிர்காலத்தில் ஏதாவது நடந்தால், முதலில் ஊடகங்கள்தான் தெரிந்துகொள்ளும். எங்களின் எந்த வேலையும் ரகசியமாக நடப்பதில்லை. என்ன செய்தாலும் எல்லோரும் அறியும்படிதான் செய்வார்கள். சரியான நேரம் வரும்போது (மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் பற்றி) தகவல் தருவோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் உ.பி மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதா, தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்து தேடியதில், இந்த மசோதா 2021ல் தயாரிக்கப்பட்டாலும், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
முடிவு:
நம் தேடலில், உத்தரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் கிடைக்காது, அரசு வேலையும் கிடைக்காது என்று தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் என்று கூறி பாஜகவினாரல் பரப்பப்படும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.