யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கவும், தமிழ்நாட்டில் இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்கவும், 14 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் படிப்படியாக HPV தடுப்பூசி போட நிதியை தமிழ்நாடு அரசே வழங்கியிருக்கிறது. கடந்த 2025-2026 ஆம் ஆண்டு மாநில பட்ஜெட்டில் இதற்காக ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு போடப்படும் HPV தடுப்பூசிக்கான நிதியை ஒன்றிய அரசு அளிக்கிறது - சுமதி மேகவர்ணம், பாஜக

விரிவான விளக்கம்
ஆகாயம் தமிழ் யூடியூப் பக்கத்தில் மார்ச் 10,2026 அன்று விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் திமுக, அதிமுக, பாஜக, நாதக, தவெக கட்சிகளை சேர்ந்த பேச்சாளர்கள் கலந்துக்கொண்டனர். இதில் பாஜக சார்பில் சுமதி மேகவர்ணம் கலந்துக்கொண்டு பேசிய போது, தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு போடப்படும் HPV தடுப்பூசிக்கான நிதியை ஒன்றிய அரசு அளிக்கிறது என்றும், திமுக அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாகவும் பேசியிருந்தார்.
உண்மை என்ன?
HPV தடுப்பூசி குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஏப்ரல் 04, 2025 அன்று “14 வயதுடைய சிறுமிகளுக்கான HPV தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஒரு மாநில ஆலோசனைக் குழுவை அமைத்தல்” என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது. அதில் கருப்பை புற்றுநோயைத் தடுத்திடவும், தமிழ்நாட்டில் இந்நோயை முழுமையாக ஒழித்திடவும், 14 வயதுடைய அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக HPV தடுப்பூசியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, 2025-2026 ஆம் ஆண்டில் ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடியப் போது, தினமணி ஊடகத்தில் ”சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்!” என்ற தலைப்பில் ஜனவரி 27, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது.
அதில் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க ரூ.14,000 மதிப்புள்ள இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நடைபெற்று வரும் உலக மகளிர் உச்சி மாநாட்டில் தொடக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3.39- லட்சம் சிறுமிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக ரூ.36- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
எனவே, தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு போடப்படும் HPV தடுப்பூசிக்கான நிதியை ஒன்றிய அரசு அளிப்பதாக பாஜகவை சேர்ந்த சுமதி மேகவர்ணம் பேசியது தவறான தகவலாகும்.