யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘ரயில் தண்டவாளங்களுக்கு நடுவே சோலார் பேனலை பொருத்தி மின்சாரம் தயாரிக்கும் இந்திய ரயில்வே’ எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை. சுவிட்சர்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை முயற்சியாக செயல்படுத்திய திட்டத்தை, இந்திய ரயில்வேயின் திட்டம் என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இந்தியா ரயில் பாதைகளை மின் உற்பத்தி நிலையங்களாக மாற்றுகிறது.
நிலையான உள்கட்டமைப்பிற்கான ஒரு மாற்றமான நடவடிக்கையாக, இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனமான சன்-வேஸ், ரயில் பாதைகளுக்கு இடையில் நேரடியாக நீக்கக்கூடிய சோலார் பேனல்களைப் பயன்படுத்துகிறது.
கூடுதல் நிலம் தேவையில்லை
ரயில் சேவைகளுக்கு இடையூறு இல்லை
காட்சி மாசுபாடு பூஜ்ஜியமாகும்
இந்த அணுகுமுறை ஆண்டுதோறும் 1 டெராவாட்-மணி நேரத்திற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும், இது 200,000 வீடுகளுக்கு மேல் மின்சாரம் வழங்கும்

விரிவான விளக்கம்
ரயில் தண்டவாளங்களுக்கு நடுவே சோலார் பேனலை பொருத்தி இந்திய ரயில்வே மின்சாரம் தயாரிப்பதாகவும், ஸ்டார்ட் அப் நிறுவனமான சன்-வேஸ் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், இது ஆண்டுதோறும் 1 டெராவாட் மணி நேரத்திற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிவும் என்றும், இதன் மூலம் 2 லட்சம் வீடுகளுக்கு மேல் மின்சாரம் வழங்க முடியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் தேடினோம். அப்போது swiss info என்ற சுவிட்சர்லாந்தின் செய்தி ஊடகப்பக்கத்தில், “Switzerland turns train tracks into solar power plants” என்ற தலைப்பில் ஏப்ரல் 29 அன்று பரவி வரும் புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் சுவிட்சர்லாந்தில் ரயில் பாதைகளுக்கு இடையில் சோதனை முயற்சியாக சூரிய மின் தகடுகள் நிறுவப்படுகிறது. இந்த புரட்சிகர தொழில்நுட்பம் மற்ற நாடுகளிடமிருந்து ஆர்வத்தை ஈர்த்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பல நாடுகளைப் போலவே, சுவிட்சர்லாந்தும் பூஜ்ஜிய-உமிழ்வு சமூகத்தை அடைய சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நம்பியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, Indonesia Business Post என்ற ஊடகப்பக்கத்தில் “Swiss startup Sun-Ways trials world-first removable solar panels on railway tracks” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் சுவிஸ் ஸ்டார்ட் அப் நிறுவனமான சன்-வேஸ், ரயில் பாதைகளில் நேரடியாக நிறுவக்கூடிய ஒரு புதுமையான சோலார் பேனல் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், சுவிட்சர்லாந்தின் பட்ஸில் உள்ள 100 மீட்டர் நீளமுள்ள பாதையில் இந்த சோலார் பேனல்கள் சோதனை கட்டத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சுவிட்சர்லாந்தில் உள்ள 5,320 கிலோமீட்டர் ரயில் நெட்வொர்க் மூலம் ஆண்டுதோறும் 1 பில்லியன் கிலோவாட்-மணி நேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிவு என்று சன்-வேஸ் மதிப்பிடுவதாகவும், இதன் மூலம் சுமார் 3,00,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், சுவிட்சர்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை முயற்சியாக செயல்படுத்திய ரயில் பாதைகளில் சோலர் பேனல் திட்டத்தை, இந்திய ரயில்வேயின் திட்டம் என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருவது தெரியவந்தது.