யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 45 நாட்களில் விசாரணையை முடித்து மரண தண்டனை வழங்கப்பட்டது, ஆனால் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
பரவிய செய்தி
குஜராத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட POCSO வழக்கு 40 நாட்களுக்குள் விசாரணை முடிந்து குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. குற்றவாளி தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார். - தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் S.G.சூரியா.
விரிவான விளக்கம்
கடந்த ஜனவரி 18ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் S.G.சூரியா, குஜராத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட POCSO வழக்கு ஒன்றில் 40 நாட்களுக்குள் விசாரணை முடிந்து குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. குற்றவாளி தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார். ஒவ்வொரு மாநிலமும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இவ்வளவு நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியில் இருப்பவர்களை பின்தொடர்வது, கைது செய்வது இது மட்டுமே வேலை என்ற நிலைக்கு போலீஸ் மாற்றப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
உண்மை என்ன?
குஜராத்தில் 40 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்ட POCSO வழக்கு பற்றி இணையத்தில் தேடினோம். ‘India Today’ ஜனவரி 18ஆம் தேதி வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
அதில், ‘குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டத்தின் சிறப்பு நீதிமன்றம் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த குற்றச் செயல் நடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடந்துள்ளது. அதிலிருந்து 45 நாட்களில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி V.A.ராணா தனது தீர்ப்பை ஜனவரி 12ஆம் தேதியே வழங்கியிருந்தாலும், தண்டனை குறித்த விவரம் ஜனவரி 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 45 நாட்களில் விசாரணையை முடித்து குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியது உண்மை தான். ஆனால் அந்த தண்டனை அறிவிக்கப்பட்டதே ஜனவரி 18ஆம் தேதிதான் என்பது தெரிய வருகிறது. மேலும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டாலும் அவர் இன்னும் தூக்கிலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
குஜராத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 45 நாட்களில் விசாரணையை முடித்து மரண தண்டனை வழங்கப்பட்டது என்ற உண்மையை திரித்து, அந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக தவறான தகவலை கூறியுள்ளார் S.G.சூர்யா.