யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நொய்டா, காஷியாபாத், மீரத், சண்டிகர் ஆகிய நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் காற்றின் தரம் மேம்பட்டதாகவே இருக்கிறது.
பரவிய செய்தி
”தலைநகர் டெல்லி இந்தியாவில் அதிக காற்று மாசுபட்ட நகரமாக இருக்கிறது. அடுத்ததாக சென்னை தான் இரண்டாவது அதிக காற்று மாசுபட்ட நகரமாக இருக்கிறது” - சீமான்.
விரிவான விளக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரச்சாரப் பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மார்ச் 24ஆம் தேதியன்று திருப்பத்தூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘தலைநகர் டெல்லி இந்தியாவில் அதிக காற்று மாசுபட்ட நகரமாக இருக்கிறது. அடுத்ததாக சென்னை தான் இரண்டாவது அதிக காற்று மாசுபட்ட நகரமாக இருக்கிறது’ என்று கூறினார்.
உண்மை என்ன?
இந்திய நகரங்களில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை தேடியபோது, 2025 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கிர்தீ வர்தன் சிங் சமர்பித்த தரவுகளைக் காணமுடிந்தது.
அதில், 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் மாநிலங்களின் தலைநகர்களில் காற்று மாசுபாடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது Air Quality Index (AQI) என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டிருந்தது. AQI அடிப்படையில் காற்றின் தரம் என்பது ’நன்று (Good)’, ‘மிதமானது (Moderate)’, ‘மோசமானது (Poor)’, மிக மோசமானது (Very Poor)’, ‘தீவிரமான நிலை (Severe)’ என்று தரநிலைபடுத்தப்பட்டிருந்தது. இந்திய மாநிலங்களின் தலைநகர்களில் எத்தனை நாட்கள் காற்றின் தரம் மோசமாக இருந்தது, மிதமானதாக இருந்தது என்ற தரவுகள் அதில் கொடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, டெல்லிக்கு அடுத்தபடியாக சண்டிகர் நகரில் காற்றின் தரநிலை 67 நாட்கள் மோசமான நிலையிலும் 23 நாட்கள் மிக மோசமான நிலையிலும் இருந்திருக்கிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் 18 நாட்கள் மிக மோசமான நிலையிலும் 130 மோசமான நிலையிலும் இருந்திருக்கிறது. திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் காற்றின் தரம் 13 நாட்கள் மிக மோசமாகவும் 80 நாட்கள் மோசமாகவும் இருந்திருக்கிறது. இவற்றுடன் ஒப்பிடுகையில் சென்னையின் காற்றின் தரநிலை 2 நாட்கள் மட்டுமே மோசமாக இருந்திருக்கிறது. ஒரு நாள் கூட மிக மோசமான நிலையை அடைந்ததில்லை.
அதேபோல், 2026 ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளையும் காணமுடிகிறது. அதில் 2025ஆம் ஆண்டில் இந்திய நகரங்களில் காற்றின் தரநிலை எந்த அளவிற்கு மிக மோசமாகவும் (very bad), தீவிரமாகவும் (severe) இருந்தது என்பதைக் காணமுடிகிறது. இதிலும் டெல்லிக்கு அடுத்தபடியாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா, காஷியாபாத், மீரத், ஆகிய நகரங்களிலும்; ஹரியான மாநிலத்தின் தாருஹேரா, பஹதூர்கர் ஆகிய நகரங்களிலும் தான் காற்று மாசு அதிகமாக இருந்திருக்கிறது.
இதிலிருந்து, தமிழ்நாட்டில் சென்னை மற்றும் பிற நகரங்களில் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள நகரங்களை ஒப்பிடுகையில் காற்றின் தரம் மேம்பட்டதாகவே இருக்கிறது என்பது தெரியவருகிறது.
முடிவு:
அதிகமாக காற்று மாசடைந்த நகரங்களில் டெல்லிக்கு அடுத்ததாக சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளதாக சீமான் சொல்வது பொய்யான தகவலாகும்.