யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மிண்டா தேவியின் வயது 124 என்று வாக்காளர் பட்டியலில் தவறாக குறிப்பிட்டுள்ளதை, தேர்தல் மோசடிகளுக்கு இதுவொரு எடுத்துக்காட்டு என்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செய்கிறது.
பரவிய செய்தி
மின்டா தேவி என ஒருவரே இல்லை, மோடி அவர் பெயரை வைத்து போலி வாக்காளர்களை உருவாக்குகிறார் -காங்கிரஸ். என் பெயர் மின்டா தேவி, வயது 34, நான் போலி இல்லை -மின்டா தேவி
மெண்டல்களை மிரள விட்ட மின்டா.

விரிவான விளக்கம்
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து கொண்டு தேர்தல்களில் மோசடி செய்வதாக’ எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார். போலியான புகைப்படங்கள், தவறான முகவரிகள், ஒரே முகவரிகள் நிறைய வாக்காளர்கள் இருப்பது போன்றவற்றால் லட்சக் கணக்கான வாக்குகள் போலியாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், மிண்டா தேவி என்ற வாக்காளரின் வயது 124 என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் அம்மலப்படுத்தினார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிண்டா தேவியின் புகைப்படமும் ‘124 not out’ என்ற வாசகமும் அச்சிடப்பட்ட டிசர்ட்களை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்டா தேவி என ஒருவரே இல்லை, மோடி அவர் பெயரை வைத்து போலி வாக்காளர்களை உருவாக்குகிறார் -காங்கிரஸ்
என் பெயர் மின்டா தேவி, வயது 34, நான் போலி இல்லை -மின்டா தேவி
மெண்டல்களை மிரள விட்ட மின்டா😂 pic.twitter.com/vv4AkhWime
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த சங்கி பிரின்ஸ் என்பவர், , NDTV-ன் செய்தி ஒன்றை பகிர்ந்து ‘மின்டா தேவி என ஒருவரே இல்லை, மோடி அவர் பெயரை வைத்து போலி வாக்காளர்களை உருவாக்குகிறார்’ என்று காங்கிரஸ் சொல்வதாக சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.
உண்மை என்ன?
இது குறித்த keywords-களைக் கொண்டு தேடுகையில், ‘THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், "இளமையாகத் தோற்றமளிக்கும் வயதான மனிதர்" என்ற கின்னஸ் உலக சாதனைக்காக நான் மிண்டா தேவியை பிரிந்துரை செய்வேன் என்று காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், ‘மிண்டா தேவி முதல்முறையாக வாக்களிக்கும் நபர் என்று வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது வயது 124 என்று குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று கூறுவதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.
மேலும் தேடுகையில், ’தினமணி’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், சமீபத்தில் வெளியிடப்பட்ட பிகார் வாக்காளர் வரைவு பட்டியலில் தரௌண்டா சட்டப்பேரவை தொகுதியின் கீழ் மிண்டா தேவி என்ற 124 வயது மூதாட்டியின் பெயர் இடம்பெற்றிருந்தது குறித்த screenshot வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் உலகளவில் அதிக வயதானவராக 115 வயதில் உள்ள ஒருவரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் எப்படி 124 வயதில் வாக்காளராக இருக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அணிந்துள்ள டிசர்ட்-ல் மிண்டா தேவியின் புகைப்படம் அச்சிடிப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இது சம்பந்தமாக மிண்டா தேவி கூறுகையில், "என் முகத்தை டி-சர்ட்டில் அச்சிட்டு அதை அணிந்து கொள்ள பிரியங்கா காந்தி யார்? இதனால் காலையிலிருந்து நான் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். நான் இந்த வழியில் ஒரு பகடைக்காயாக பயன்படுத்தப்படுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னுடைய ஒரே வேண்டுகோள், என்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை சரி செய்ய வேண்டும் என்பதுதான்” என்று கூறியுள்ளார்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘வாக்காளர் பட்டியலில் மிண்டா தேவியின் வயது 124 என்று தவறாக குறிப்பிட்டுள்ளது என்றும் இது தேர்தல் மோசடிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும்’ கூறி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் மிண்டா தேவி என்ற நபரே போலி என்று அவர்கள் எங்கேயும் குறிப்பிடவில்லை.
முடிவு:
மிண்டா தேவியின் வயது 124 என்று வாக்காளர் பட்டியலில் தவறாக குறிப்பிட்டுள்ளதை, தேர்தல் மோசடிகளுக்கு இதுவொரு எடுத்துக்காட்டு என்று கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செய்கிறது. இதனைத் திரித்து, மின்டா தேவி என்று இல்லாத ஒருவரை வைத்து, போலி வாக்காளரை உருவாக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் சொல்வதாக தவறாக பரப்புகிறார் சங்கி பிரின்ஸ்.