யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ராகுல் காந்தியின் கையில் இருப்பது, இராணுவத் தளபதியான Manoj Naravane-ன் FOUR STARS OF DESTINY என்ற சுயசரிதை புத்தகமாகும். இது குறித்தான வீடியோ ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட பக்கங்கள் இருப்பதை தெளிவாக பார்க்கமுடிகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சமீபத்தில் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, இராணுவத் தளபதியான Manoj Naravane-ன் FOUR STARS OF DESTINY என்ற சுயசரிதை புத்தகத்தின் பிரதியை மக்களவையில் காண்பித்து வாதிட்டார்.
இந்நிலையில் இப்படி ஒரு புத்தகம் இல்லை என்றும், வெறும் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறார் என்றும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வைரலாகி வருகிறது.
‼️ Pappu is roaming around with a fake book full of blank pages—just like the earlier red “Constitution” prop, which was empty too.
Now even the publisher is preparing legal action against him. One more apology loading from Pappu pager. pic.twitter.com/YQeo599i6W
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிப்ரவரி 04 அன்று ”பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்தால், நான் அவருக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளிப்பேன்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று பதிவாகியிருந்தது. அந்த வீடியோவில் உள்ள காட்சியை தான் Screenshot எடுத்து பரப்பி வருவது தெரியவந்தது. அந்த வீடியோவில் இராணுவத் தளபதியான Manoj Naravane-ன் FOUR STARS OF DESTINY என்ற சுயசரிதை புத்தகத்தை கையில் வைத்திருப்பதும், அதில் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட பக்கங்கள் இருப்பதை தெளிவாக பார்க்கமுடிகிறது.
இதையடுத்து FOUR STARS OF DESTINY என்ற புத்தகம் குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது Penguin India என்ற எக்ஸ் பக்கத்தில் பிப்ரவரி 09 அன்று வெளியீட்டாளரின் அறிக்கை என்று பதிவு ஒன்றை வெளியாகியிருந்தது. அதில் FOUR STARS OF DESTINY என்ற புத்தகத்தின் வெளியீட்டு உரிமையை நாங்கள் மட்டுமே கொண்டுள்ளோம் என்பதை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா தெளிவுபடுத்த விரும்புகிறது. இந்தப் புத்தகம் இன்னும் வெளியீட்டிற்கு வரவில்லை. புத்தகத்தின் எந்தப் பிரதிகளும் அச்சு அல்லது டிஜிட்டல் வடிவத்தில் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியாவால் வெளியிடப்படவில்லை, விநியோகிக்கப்படவில்லை, விற்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.
Statement from the publisher. pic.twitter.com/pksacg3EeT
அதே போல் இந்த புத்தகத்தின் எழுத்தாளரான Manoj Naravane, ”என்னுடைய புத்தகம் இப்போது கிடைக்கிறது” என்று புத்தகம் கிடைக்கும் லிங்கை குறிப்பிட்டு டிசம்பர் 15, 2023 அன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றை பார்க்கமுடிந்தது.
Hello friends. My book is available now. Just follow the link. Happy reading. Jai Hind pic.twitter.com/VCiLiZOWIi
மேலும் The Hindu ஊடகத்தில், “Delhi Police to probe leak of Naravane’s book Four Stars of Destiny” என்ற தலைப்பில் பிப்ரவரி 10 அன்று வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் FOUR STARS OF DESTINY புத்தகத்தின் அச்சிடப்பட்ட முன் நகல் ஆன்லைனில் பரப்பப்படுவதை டெல்லி காவல்துறை கவனத்தில் கொண்டது. இந்தப் பிரதி கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து சிறப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. புத்தகத்தை வெளியிடுவதற்குத் தேவையான அனுமதி இன்னும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெறப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின்படி, ராகுல் காந்தி கையில் வைத்திருந்தது இராணுவத் தளபதியான Manoj Naravane-ன் FOUR STARS OF DESTINY என்ற சுயசரிதை புத்தகமாகும். மேலும் இந்த புத்தகம் பல்வேறு காரணங்களுக்காக இன்னும் வெளியிடப்படமால் இருக்கிறது. எனவே ராகுல் காந்தி வெறும் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை வைத்திருப்பதாகவும், இப்படி ஒரு புத்தகமே இல்லை என்றும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
