யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ரூ.1,791.23 கோடி செலவில் கோவையில் கட்டப்பட்டுள்ள இந்த உயர்மட்டசாலை மேம்பாலம், தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து மட்டுமே கட்டப்பட்டுள்ளது .
பரவிய செய்தி
தமிழகத்தில் மிக நீளமான பாலத்தை கோவை மக்களின் போக்குவரத்தை எளிமையாக்க தந்த பாரத பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நன்றி

விரிவான விளக்கம்
கோவையில் 1,791 கோடி ரூபாய் செலவில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கிலோ மீட்டரில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவின் எடிசன் என்று சொல்லக்கூடிய, ஜி.டி நாயிடுவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை அக்டோபர் 9ஆம் தேதி, மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில் இந்த பாலம் ஒன்றிய அரசு வழங்கிய நிதி மூலம் தான் கட்டப்பட்டது என்று கூறி சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.
தமிழகத்தில் மிக நீளமான பாலத்தை கோவை மக்களின் போக்குவரத்தை எளிமையாக்க தந்த பாரத பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏 pic.twitter.com/lO1o9FDvwS
உண்மை என்ன?
பரவி வரும் இந்த தகவல் குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் “Iron deck installation of Avinashi Road elevated flyover begins tonight in Coimbatore” என்ற தலைப்பில் ஜூலை 29,2025 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் சிறப்புத் திட்டப்பிரிவால் செயல்படுத்தப்படும் அவினாசி சாலை உயர்த்தப்பட்ட மேம்பாலம் திட்டத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இரும்புத் தளம் நிறுவும் பணிகள் தொடங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, அக்டோபர் 7ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் 2020ல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை மேம்பாலம், திராவிட மாடல் அரசு பெறுப்பேற்று ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்த பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல் ஜூலை 11, 2024 அன்று வெளியிடப்பட்டிருந்த தமிழக அரசானை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் மாநில நிதியின் கீழ் ரூ.1,621.30 கோடி தொகைக்கு நிர்வாக ஒப்புதலை வழங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், ரூ.1,791.23 கோடி செலவில் கோவையில் கட்டப்பட்டுள்ள இந்த உயர்மட்டசாலை மேம்பாலம், தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதனை ஒன்றிய அரசு வழங்கிய நிதி மூலம் கட்டப்பட்டது என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை.