யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பேசுவதற்காக எழுந்து சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை வெட்டி, அவமதிக்கப்பட்டதாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
தேசிய கட்சியின் தேசிய தலைவருக்கு மரியாதை இவ்வளவு தான்!!! டெல்லி தேர்தல் முடிவு இப்போதே தெரியுது.

விரிவான விளக்கம்
காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று பாஜக-வின் சிந்தனையாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கணியம்பூண்டி செந்தில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தேசிய கட்சியின் தேசிய தலைவருக்கு மரியாதை இவ்வளவு தான்!!!
#NewDelhi #RahulGandhiExposed #CongressMuktBharat pic.twitter.com/DKfboHmca7
டெல்லி தேர்தல் முடிவு இப்போதே தெரியுது 😂👌
டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கார்கேவை நாற்காலியிலிருந்து ராகுல் காந்தி எழுப்பியதாகப் பரவும் இந்த வீடியோவை அத்தேர்தலுடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ குறித்துத் தேடியதில் இது டெல்லி தேர்தலுடன் தொடர்புடைய நிகழ்ச்சி இல்லை என்பதை அறிய முடிந்தது. இவ்வீடியோ காங்கிரஸ் கட்சி புதிதாகத் திறந்த தலைமை அலுவலகம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட முழு வீடியோ காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கடந்த 15ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.
‘இந்திரா பவன்’ எனப் பெயர் வைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் டெல்லியில் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவின் சிறு பகுதியை மட்டும் வெட்டி பாஜக-வினர் பரப்பியுள்ளனர்.
அவ்வீடியோவின் 46வது நிமிடத்தில் பரவக் கூடிய பகுதி இடம்பெற்றுள்ளது. ராகுல் காந்தி பேசி முடித்ததும் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அழைக்கின்றனர். அவர் எழுந்து பேச வருவதற்கு ஏதுவாக ராகுல் காந்தி நாற்காலியை நகர்த்தி உதவி செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெட்டி, கார்கேவை நாற்காலியிலிருந்து எழுந்துகொள்ள ராகுல் கூறியதாகத் தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர்.
திறப்பு விழாவிற்கு முன்னதாக காங்கிரஸ் கொடியை கார்கேதான் ஏற்றியுள்ளார். மேலும், சோனியா காந்தி மற்றும் கார்கே இருவரும் இணைந்துதான் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளனர். இவற்றிலிருந்து காங்கிரஸ் நிகழ்ச்சியில் கார்கே அவமதிக்கப்பட்டதாக பாஜக-வினர் பரப்பும் தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
மல்லிகார்ஜுன கார்கே பேசுவதற்காக எழுந்து சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை வெட்டி, அவர் அவமதிக்கப்பட்டதாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.