யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உண்மை நிலையை திரித்து தமிழ்நாட்டின் நிதிநிலை அபாயகரமான நிலையில் இருப்பதாக பிரவீன் சக்கரவர்த்தி தவறாக பரப்பி வருகிறார்.
பரவிய செய்தி
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் மற்ற அனைத்து மாநிலங்களையும்விட அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் கடன் நிலை ஆபாயமானதாக இருக்கிறது. - பிரவீன் சக்கரவர்த்தி

விரிவான விளக்கம்
காங்கிரஸ் கட்சியின் தரவுகள் பகுப்பாய்வு துறையின் (Data Analytics) தலைவராக செயல்பட்டு வருபவர் பிரவீன் சக்கரவர்த்தி. இவர் சமீபத்தில் ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், ‘தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் மற்ற அனைத்து மாநிலங்களையும்விட அதிகமாக இருக்கிறது. 2010ஆம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலம் தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு அதிக கடனைக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாடு தான் அதிக கடன் உள்ள மாநிலமாக இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் கடன் நிலை ஆபாயமானதாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
TN has the highest outstanding debt of all states
In 2010, UP had more than double the debt of TN
Now, TN has higher debt than UP👇🏽
TN’s interest burden (%) is 3rd highest after PB & HR
TN’s debt/gdp is still much higher than pre-covid levels
TN’s debt situation is alarming! https://t.co/3CzHxWNKJF pic.twitter.com/dmxa4Aj9C2
உண்மை என்ன?
தமிழ்நாட்டின் கடன் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை தேடினோம். நிதித்துறையின் இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி 2024 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் கொடுத்துள்ள தகவல் படி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 8.34 லட்சம் கோடியாக இருக்கிறது. இது மற்ற மாநிலங்களைவிட அதிகமானது என்பது உண்மை தான்.

ஆனால், ஒரு மாநிலம் வாங்கியுள்ள கடன் தொகையை மட்டும் வைத்து அதன் நிதிநிலை மோசமாக இருப்பதாக முடிவுக்கு வரமுடியாது. இந்தியாவில் ஒரு மாநிலம் அதன் பொருளாதார திறனுக்கு ஏற்றவாறு தான் கடன் வாங்கமுடியும். அந்த வகையில் வாங்கப்பட்ட கடனுக்கும் அந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகதத்தை (Debt to GDP Ratio) கொண்டுதான் முடிவு செய்யமுடியும்.

அந்த வகையில், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆவணத்தின் படி 2025 ஆண்டில் தமிழ்நாட்டின் Debt to GDP Ratio என்பது 30.3 சதவீதமாக இருக்கிறது. Debt to GDP Ratio அதிகமாக உள்ள முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு இல்லை. இந்திய அளவில் தமிழ்நாடு 18ஆம் இடத்தில் தான் இருக்கிறது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் தமிழ்நாட்டை விட இந்த விகிதத்தில் அதிகமாக இருக்கிறது. அதாவது அந்த மாநிலங்கள் வாங்கும் கடன் தொகைக்கு ஏற்ப அம்மாநிலங்களில் பொருள் உற்பத்தி வளர்ச்சியடையவில்லை.
மேலும், 2003ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மாநிலங்கள் ஒன்றிய அரசின் வலியுறுத்தலின் படி நிதி பொறுப்பு சட்டங்களை (Fiscal Responsibility Acts) இயற்றின. இந்த சட்டத்தின் அடிப்படையில் ஒரு மாநிலம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவிற்கு ஏற்பதான் கடன் பெறமுடியும். அதாவது ஒரு மாநில தான்தோன்றித்தனமாக கடன்களை வாங்கி குவிக்க முடியாது.
மேலும் ‘Outstanding debt’ என்பது ஒரு அரசு மத்திய அரசிடம் வாங்கிய கடன்கள், தேசிய சிறு சேமிப்பு நிதியத்தில் (NSSF) இருந்து வாங்கப்படும் கடன், மாநில அளவில் உள்ள பொது சேமிப்பு கணக்கிலிருந்து வாங்கப்படும் கடன், மேலும் சந்தையில் வாங்கும் கடன்கள் (Market Borrowings) ஆகியவற்றின் கூட்டுத் தொகையாகும். தேசிய சிறு சேமிப்பு நிதியம் (NSSF), மாநில பொது சேமிப்பு கணக்கிலிருந்து வாங்கப்படும் கடன்களை காட்டிலும் சந்தையில் வாங்கும் கடன்களுக்கான வட்டி செலவுகள் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சந்தையில் அதிகளவு கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. 2025 நிதியாண்டின் 11 மாதங்கள் முடிவில் தமிழ்நாடு ஒரு லட்சம் கோடி சந்தையில் கடனாக வாங்கியுள்ளது. இதிலிருந்து, தமிழ்நாடு அதிகமாக கடன் வாங்கியதாக சொல்லப்பட்டாலும், அதில் பெரும்பாலான கடன் தொகை குறைந்த வட்டிக்கு வாங்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.
இதிலிருந்து பிரவீன் சக்ரவர்த்தி உண்மை விவரத்தின் ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக்காட்டி அதனை திரித்து தவறான தகவலை பரப்பிவருகிறார்.
முடிவு:
இவ்வாறு உண்மை நிலையை திரித்து தமிழ்நாட்டின் நிதிநிலை ஆபாயகரமான நிலையில் இருப்பதாக பிரவீன் சக்கரவர்த்தி தவறாக பரப்பி வருகிறார்.