YouTurn

இந்திய பிராண்டட் உப்பில் உள்ள 'பொட்டாசியம் ஃபெரோசயனைடு' ஒர் உயிர்க்கொல்லி என அமெரிக்க ஆய்வு தெரிவித்ததாகப் பரவும் வதந்தி !

இந்திய பிராண்டட் உப்பில் உள்ள 'பொட்டாசியம் ஃபெரோசயனைடு' ஒர் உயிர்க்கொல்லி என அமெரிக்க ஆய்வு தெரிவித்ததாகப் பரவும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

எச்சரிக்கை: உப்பு எனும் உயிர்க்கொல்லி! இந்தியாவில் அயோடின் கலந்த உப்புகள் என்ற பெயரில் விற்கப்படும் டாடா , அண்ணபூர்ணா மற்றும் பல பிரண்ட்டட் உப்புகளை ஆய்வு செய்த அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி தரும் ரிப்போர்ட் ஒன்றைத் தந்திருக்கிறது.

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

ந்தியாவில் விற்பனை செய்யப்படும் அயோடின் கலந்த உப்புகள் குறித்து அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டு உள்ளதாக ஆங்கில செய்தித்தாள் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அப்பதிவுகளில், பொட்டாசியம் ஃபெரோசயனைடு (Potassium Ferrocyanide) என்கிற உயிருக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடிய விஷம் கலந்த பிராண்டட் பாக்கெட் உப்புகள் பயன்படுத்துவதால், தைராய்டு (Hyperthyroidism), புற்றுநோய், நீரழிவு நோய், உயர்இரத்த அழுத்தம், கொழுப்பு, மலட்டுத்தன்மை, உடல் பருமன், சிறுநீரக செயல் இழப்பு போன்ற உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய்கள் ஏற்படும் என்று கண்டறிந்துள்ளது. எனவே சாதாரண கடல் உப்பை மட்டுமே வாங்குங்கள். அதையும் குறைவாகப் பயன்படுத்தி உங்கள் உடல் நலத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்." என்று குறிப்பிட்டுள்ளது.





உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்த செய்தி கடந்த 2019-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.



பொதுவாக உலகம் முழுவதுமே 'பொட்டாசியம் ஃபெரோசயனைடு' ஆனது உப்புகள் கட்டியாகாமல் (anti-caking agent) இருப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வேதியியல் வாய்ப்பாடு K4[Fe(CN)6].3H20. இதில் சயனைடு அயனிகள் இரும்பு அயனிகளுடன் வலுவாக பிணைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் KCN என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட பொட்டாசியம் சயனைடு உயிரைக் கொல்லக்கூடிய நச்சுப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் பொட்டாசியம் ஃபெரோசயனைடை, பொட்டாசியம் சயனைடு என்று தவறாக புரிந்து கொண்டு பரப்பி வருகின்றனர்.

இது குறித்து தி ஹிந்து நாளிதழ் கடந்த 2019-ல் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், IISER கொல்கத்தாவின் கனிம வேதியியலாளர் டாக்டர். சயம் சென்குப்தாவின் கூற்றுப்படி, பொதுவாக LD50 எனப்படும் 'Lethal Dose 50%' மூலம் விலங்குகளில் இரசாயன அளவை செலுத்தி, அந்த விலங்கிற்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இரசாயனத்தின் அளவு எவ்வளவு என்பது குறித்து கணக்கிடப்படுகிறது.

அதன்படி, எலியின் எடையில் ஒரு கிலோவுக்கு 3 கிராம் என்ற அளவில் சோடியம் குளோரைடு சேர்க்கும் போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சோடியம் குளோரைடின் LD50 மதிப்பு 3 கிராம். இதே போன்று பொட்டாசியம் ஃபெரோசயனைடு வைத்து ஆய்வு செய்ததில், பொட்டாசியம் ஃபெரோசயனைடின் LD50 மதிப்பு 3.6 கிராமாக இருந்ததைக் காண முடிகிறது. இதன் மூலம் பொட்டாசியம் ஃபெரோசயனைட்டின் LD50 மதிப்பு, சாதாரண உப்பைப் போலவே உள்ளது என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டிருந்தது.



இதே போன்று பொட்டாசியம் ஃபெரோசயனைட்டின் அளவை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பரிந்துரைத்துள்ளது. அதன் படி, உப்பில் அனுமதிக்கப்பட்ட பொட்டாசியம் ஃபெரோசயனைடின் அளவு 10 மி.கி/கி.கி. இது டாடா உப்பில் 1.90 மி.கி/கிலோ என்ற அளவிலும், சம்பார் உப்பில் சுமார் 4.71 மி.கி/கி.கி என்ற அளவிலுமே உள்ளது. இவை இரண்டும் அனுமதிக்கப்பட்ட அளவுகளே என்பது குறித்து CSIR இன் மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் அரவிந்த் குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.



மேலும் சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம், "சோடியம் உட்கொள்ளல் குறைப்பு பற்றிய உலகளாவிய அறிக்கை" ஒன்றை வெளியிட்டது. அதன்படி வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவரும் சோடியம் உட்கொள்வதை 30% குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்தியர்கள் தினசரி உட்கொள்ள வேண்டிய 5 கிராம் உப்பின் அளவை விட சராசரியாக இரண்டு மடங்கு அதிகமாக உட்கொள்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்த அறிக்கையிலும் பொட்டாசியம் ஃபெரோசயனைடு பயன்படுத்துவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

முதன்முதலில் West American Analytical Laboratories என்ற அமெரிக்க நிறுவனத்தால் தான் இந்த தகவல் கூறப்பட்டுள்ளதாகப் பரவியது. ஆனால் West American Analytical Laboratories நிறுவனத்தின் இயக்குநரான கைல் கிராஸ், பொட்டாசியம் ஃபெரோசயனைடு (PFC) குறித்து பகுப்பாய்வு செய்யவோ அல்லது அறிக்கை வெளியிடவோ இல்லை என்று 2019ல் மறுப்பு தெரிவித்து ஆல்ட் நியூஸ் நிறுவனத்திற்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.

மேலும் படிக்க: ஆவினின் ஊதா நிற செறிவூட்டப்பட்ட பால் விஷத்தன்மை கொண்டது எனப் பரப்பப்படும் வதந்திகள் !

மேலும் படிக்க: யூடியூப் சேனல்களில் பொய் பொய்யா பேசும் ஷர்மிக்கா.. ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் சொல்லும் உண்மை

வைரல் செய்யப்படும் பதிவு இந்தியாவில் விற்கப்படும் அயோடின் கலந்து உப்பிற்கு எதிரானதாகவே இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 167 மில்லியன் மக்கள் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு போதுமான அளவு அயோடின் பெறவில்லை என்றால், அவர்களது குழந்தைகள் கற்றல் குறைபாட்டுடன் பிறக்கலாம், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு, இறப்பு விகிதம் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பது குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு:

நம் தேடலில், இந்தியாவில் விற்கப்படும் உப்பில் கலக்கப்பட்டுள்ள பொட்டாசியம் ஃபெரோசயனைடு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய்களை ஏற்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாகப் பரவி வரும் தகவல்கள் பொய்யானவை என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க