யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பலாசூர் ரயில் விபத்து நடந்த ஆண்டு 2023. ஆனால் பரவி வரும் புகைப்படம் கடந்த 2021-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் விதமாக பலரும் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இந்த மத வெறி துலுக்க பயங்கரவாதி, பலாசூர் ரயில் நிலையத்தின் ஒரு முதுநிலை பிரிவுப்பொறியாளர்; 292 பேரைக் கொன்று ரயில்வேக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்திய பாலசூர் ரயில் விபத்தில் முக்கிய குற்றவாளியான, ஒடிசாவின் பாலசூர் ரயில் நிலையத்தைச் சேர்ந்த முகமது அமீர் கான்

விரிவான விளக்கம்
ஜூன் 2, 2023 அன்று ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம், பஹானாகா பஜார் இரயில் நிலையம் அருகில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 1000 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் இந்த ரயில் விபத்தில் முக்கிய குற்றவாளியான, ஒடிசாவை சேர்ந்த பாலசூர் ரயில் நிலையத்தைச் சேர்ந்த முகமது அமீர் கான் என்று வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு நபர் ஆடையின்று கிழே படுத்திருப்பதும், அவரை மற்றொரு நபர் கட்டையால் அடைப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது Re:file என்ற எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் வீடியோ ஆகஸ்ட் 17, 2021 அன்று பதிவாகியிருந்ததை காணமுடிந்தது. பலாசூர் ரயில் விபத்து நடந்தாண்டு 2023. ஆனால் பரவி வரும் புகைப்படம் கடந்த 2021ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் விதமாக பலரும் தவறான செய்திகளைப் பரப்பி வருவது தெரியவந்தது.

இதையடுத்து ”ஒடிசா ரயில் விபத்து | 3 ரயில்வே ஊழியர்கள் கைது - சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை” என்ற தலைப்பில் ஜூலை 8, 2023 அன்று இந்து தமிழ் ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் இந்த விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் அருண் குமார் மகந்தோ, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கைது செய்யப்பட்டுள்ள முகமது அமீர் கானுக்கும், பரவி வரும் வீடியோவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இதற்கு முன்பும் இதே போன்று ஒடிசா ரயில் விபத்தையொட்டி பல்வேறு பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க: ஒடிசாவில் விபத்து நடந்த இரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் பெயர் முகமது ஷெரீப் எனப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு :
“ஒடிசாவின் பலாசூர் ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளி முகமது அமீர் கானை காவல்துறையினர் கைது செய்து தண்டிக்கும் காட்சி தான் இது” எனக் கூறி பரவும் செய்திகள் தவறானவை. 2021 முதலே சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பரவி வருகிறது.