யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ் மொழிக்கு ஏற்கனவே இருக்கும் அங்கீகாரங்களை எல்லாம், மோடி ஆட்சியில் புதிதாக தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டதாக தவறான தகவல்களை பரப்புகிறார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயால்
பரவிய செய்தி
“மோடி அரசாங்கம் தமிழை எதிர்ப்பதாக திமுக குற்றம் சாட்டுகிறது. ஆனால் தமிழை உயர்த்த மோடி பல முன்னெடுப்புகளை செய்துள்ளார்” - ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயால்.
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டிற்கு வரும்போது மோடியும் அமித்ஷாவும் தமிழ் மொழியின் தொன்மை குறித்து பேசுவதும், தமிழில் பேச முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனாலும் ஒன்றிய அரசு தமிழ் மொழியை வஞ்சித்து வருவது குறித்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சம்ஸ்கிருத மொழிக்கு அதிகமாக செலவிடுவது ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்குவது என தொடர்ந்து மாநில மொழிகளை ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதை நமது ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே எழுதியுள்ளோம்.
இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயால் மோடி அரசு தமிழுக்கு செய்துள்ள சிறப்புகள் என்று தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் சிலவற்றை குறிப்பிடுகிறார். அதில், ‘மோடி ஆட்சியில் தான் முதன்முதலில் IAS, IPS போன்ற குடிமை பணிகளுக்கான தேர்வுகள் தமிழில் நடத்தப்படுகிறது; மோடி தான் தமிழ்நாட்டின் இரயில் நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்யவதை சாத்தியப்படுத்தினார்; மோடி தான் திருக்குறளை 13 மொழிகளில் மொழிபெயர்க்க வழி செய்தார்’ என்று பரப்புகிறார்.
உண்மை என்ன?
குடிமை பணிகளுக்கான தேர்வுகள் தமிழில் நடத்தப்படுவது குறித்து தேடியபோது, 1968-69 நிதியாண்டின் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஆவணத்தின் படி, அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் (Eighth Schedule) உள்ள 14 மொழிகளில் எந்த மொழியிலும் குடிமை பணிகளுக்கான தேர்வுகளை எழுதலாம் என்பது தெரிய வருகிறது.

அதன்படி UPSC மூலம் நடத்தப்படும் குடிமை பணிகளுக்கான முதன்மை தேர்வுகளை (Mains) தமிழ் மொழியில் எழுத முடியும். நேர்காணலிலும் தமிழ் மொழியை தேர்வு செய்து பங்கேற்கலாம். ஆனால் குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வின் (Prelims) கேள்வித்தாள்கள் இன்று வரை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள இரயில் நிலையங்களில் பல ஆண்டுகளாக இரயில் பற்றிய அறிவிப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் செய்யப்பட்டு வருகிறது. இது மோடி ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது என்று சொல்வது அப்பட்டமான பொய்யாகும்.
மேலும் திருக்குறள் மொழிபெயர்ப்பை பொறுத்தவரை, அது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே செய்யப்பட்டு வந்துள்ளது. 1595ஆம் ஆண்டிலே பெயர் அறியப்படாத ஆசிரியர் ஒருவரால் திருக்குறள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. 1730ல் திருக்குறள் லத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆங்கிலம், பிரென்சு, போலிஷ், ரசிய மொழி போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் குஜராத்தி, கன்னடம், வங்காளம் போன்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மேலும் ‘ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளின் அலுவல் மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்யும் திட்டம் இருப்பதாக’ தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவை கழகத்தின் இணை தலைவர் சங்கர சரவணன் தெரிவித்துள்ளார்.

இவற்றிலிருந்து, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயால் சொல்வதெல்லாம் தவறான தகவல்கள் என்பது உறுதியாகிறது.
முடிவு:
தமிழ் மொழிக்கு ஏற்கனவே இருக்கும் அங்கீகாரங்களை எல்லாம், மோடி ஆட்சியில் புதிதாக தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டதாக தவறான தகவல்களை பரப்புகிறார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயால்.