யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு அளித்த “At Home” வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களுக்கும் மரியாதை நிமித்தமாக அசாமிய கமோசா/பெட்கா (அசாமிய பாரம்பரிய சால்வை) வழங்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தி அசாமிய கமோசாவை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்வது போன்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
காங்கிரஸ்காரனுக்கு எதையாவது எப்பவும் சுருட்டிகிட்டே இருக்கனும்...
அதான் கடந்த 50 வருடமாக பாத்தோமே!!!

விரிவான விளக்கம்
77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு அளித்த “At Home” வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களுக்கும் மரியாதை நிமித்தமாக அசாமிய கமோசா/பெட்கா (அசாமிய பாரம்பரிய சால்வை) வழங்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்திக்கு அசாமிய கமோசாவை வழங்கவில்லை என்றும், யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்றார் எனவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
காங்கிரஸ்காரனுக்கு எதையாவது எப்பவும் சுருட்டிகிட்டே இருக்கனும்...
அதான் கடந்த 50 வருடமாக பாத்தோமே!!! pic.twitter.com/H6AF7KMs4m
உண்மை என்ன?
ஜனாதிபதி திரௌபதி முர்மு அளித்த “At Home” வரவேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அசாமிய கமோசா வழங்கியது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது Times Of India ஊடகத்தில், “BJP vs Congress: Rahul Gandhi ignites row at President's 'at home' reception; 'Gamosa' controversy explained” என்ற தலைப்பில் ஜனவரி 27 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஜனாதிபதி அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் அனைத்து விருந்தினர்களுக்கும் பாரம்பரிய அசாமிய சால்வை வழங்கப்பட்டதாகவும், அதை ராகுல் காந்தி அணிய மறுத்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதிலிருந்து ராகுல் காந்திக்கும் அசாமிய கமோசா வழங்கியிருப்பது தெளிவானது.

அதே போல் The Tribune ஊடகப்பக்கத்திலும், ‘At Home’ நிகழ்ச்சியில் ராகுல் காந்தி அசாமிய கமோசாவுடன் காணப்பட்டார் என்று கூறி வீடியோ வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
இதையடுத்து ராகுல் காந்தி மட்டும் தான் அசாமிய கமோசாவை அணியவில்லையா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது மக்களவை சபாநாயகரானர் ஓம் பிர்லா வெளியிட்ட பதிவு ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அசாமிய சால்வை அணிந்திருக்காத புகைப்படம் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.
அதே போல் ND TV, United News Of India போன்ற ஊடகங்களில் ‘At Home’ நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த புகைப்படங்களில் ராஜ்நாத் சிங் அசாமிய சால்வை அணிந்திருக்காததை பார்க்கமுடிந்தது.
முடிவு:
நம் தேடலில், ராகுல் காந்தி அசாமிய கமோசாவை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்வது போன்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர். வீடியோவில் காட்டப்படுவது அவருக்கு வழங்கப்பட்ட சால்வையே. அதே போல் ராகுல் காந்தியை போல், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-ம் அசாமிய கமோசாவை அணிந்திருக்காததையும் பார்க்கமுடிந்தது.