யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சவுதியைச் சேர்ந்த ‘ஃபவாஸ் அல்-ஜஹ்ரானி’ என்ற கலைஞர் உருவாக்கிய வீடியோ இது. இந்நிலையில் இதை காசாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி, காசாவில் உள்ள மக்கள் இவ்வாறு போலியான வீடியோவை வெளியிட்டு ஏமாற்றுவது போல தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
நான் கூட பின்னாடி வெடிக்கிறது தீபாவளி பட்டாசுகளோனு நினைச்சிருக்கேன், அட கருமம் வெறும் பலூன் வச்சி ஏமாத்திருக்கானுங்க. இந்த அறிவ படிப்புல காட்டிருந்தா உருப்பட்டுப்பீங்களேடா.

விரிவான விளக்கம்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா நகரை கட்டுப்பாட்டில் வைத்து இருந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் நீண்ட காலம் மோதல் நீடித்து வந்தது. இந்த மோதலின் உச்சமாக, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு, இஸ்ரேலியர்கள் பலரையும் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் காசா நகர் மீது போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை இந்த போர் தொடரும் என்றும் இஸ்ரேல் அறிவித்தது. இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காசாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி, அங்குள்ள மக்கள் இவ்வாறு போலியான வீடியோவை வெளியிட்டு ஏமாற்றுவதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது 24 ஜூலை அன்று fawazali214 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகள் பதிவிடப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில், ஃபாவாஸ் அல்-ஜஹ்ரானி, எனது வடிவமைப்பு, எனது புகைப்படம், காசா, மனசாட்சி போன்ற hastagகள் பயன்படுத்தப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது.
இதையடுத்து அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தோம். அந்த பக்கத்தின் BIOவில் இயக்குநர், நடிகர், வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வருபவர் சவுதியைச் சேர்ந்த ‘ஃபவாஸ் அல்-ஜஹ்ரானி’ என்பதும் தெரியவந்தது.

அதே போல் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதே போன்று பல்வேறு வீடியோக்களை இயக்கி, அதை பதிவு செய்திருப்பதையும் பார்க்கமுடிந்தது.

இது குறித்து வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது Al Arabiya ஊடகப்பக்கத்தில் பக்கத்தில் ஜனவரி 11,2023 அன்று, ஃபவாஸ் அல்-ஜஹ்ரானி படைப்புகள் அதிக பார்வையாளர்களைப் பெறுவதாகவும், சவுதி கலைஞர் ஃபவாஸ் அல்-ஜஹ்ரானியுடனான சிறப்பு நேர்காணல் எனவும் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுயிருந்ததை பார்க்கமுடிந்தது.
முடிவு:
நம் தேடலில், இது சவுதியைச் சேர்ந்த ‘ஃபவாஸ் அல்-ஜஹ்ரானி’ என்ற கலைஞர் உருவாக்கிய வீடியோவாகும். இதை காசாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி, காசாவில் உள்ள மக்கள் இவ்வாறு போலியான வீடியோவை வெளியிட்டு ஏமாற்றுவது போல தவறாகப் பரப்பி வருகின்றனர்.