யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.
பரவிய செய்தி
கொரிய நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி, பெண் வேடமணிந்து ஹோலி பண்டிகையில் கலந்து கொண்டார்.
ஆனால் அவரை உண்மையான பெண் என நினைத்து சிலர் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது.

விரிவான விளக்கம்
இந்தியாவில் பீகார் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் வேடமிட்டிருந்த கொரியன் Vlogger, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ யுட்யூப் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் ஏப்ரல் 11, 2026 அன்று பதிவாகியிருந்தது. ஆனால் அந்த முழு வீடியோவில் ஹோலி பண்டிகை கொண்டாடுவது போன்ற காட்சிகள் இடம்பெறவில்லை.
மேலும் அந்த வீடியோவில் Bangladesh Hashtag இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. இதிலிருந்து இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.
இதையடுத்து அதே யுட்யூப் பக்கத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடுவது போன்ற வீடியோ எதேனும் பதிவாகியுள்ளதா என்பதை தேடினோம். அப்போது Indias Largest festival 'Holi Festival' என்று குறிப்பிட்டு மே 16, 2025 அன்று ஒரு வீடியோ பதிவாகியிருந்தது. அந்த வீடியோவில் பரவி வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.
இதைவைத்து பார்க்கும் போது, கடந்த ஆண்டு இந்தியாவில் ஹோலி பண்டிகையின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் தற்போது வங்கதேசத்தில் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என இரு வெவ்வேறு வீடியோ காட்சிகளை இணைத்து தற்போது தவறாகப் பரப்புவது தெரியவந்தது.
மேலும் கொரியன் Vlogger-ஆன சுமீன், பரவி வரும் குறித்து தனது threads பக்கத்தில் விளக்கமளித்திருந்ததையும் பார்க்கமுடிந்தது. அதில் அவர், "கர்ப்பிணிப் பெண் வேடத்தில் இடம்பெற்ற அந்த வீடியோ காட்சி இந்தியாவில் அல்ல, வங்காளதேசத்தில் தான் படமாக்கப்பட்டது என்றும், இந்தியாவில் ஹோலி பண்டிகையை நான் கொண்டாடும் அந்தக் காணொளியில், நான் நானாகவே இருக்கிறேன், அதில் வேறு எந்த மாற்றமும் இல்லை" என்று குறிப்பிட்டுருந்தார்.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, கொரியன் Vlogger-ஆன சுமின் கடந்த ஆண்டு இந்தியாவில் ஹோலி பண்டிகையின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் தற்போது வங்கதேசத்தில் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என இரு வெவ்வேறு வீடியோ காட்சிகளை இணைத்து தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.