யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
டெல்லியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள் எனப் பரவும் வீடியோ, கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்தே ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
கெஜ்ரிவாலை விட டெல்லி முதல்வர் ரேகா குப்தா பரவாயில்லை, யமுனா ஜியை சுத்தம் செய்ய இலவச ஷாம்பு கலந்து விட்டுள்ளார்.
விரிவான விளக்கம்
டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆட்சியில், ரசாயன நுரை அதிகமாகக் காணப்படும் யமுனை ஆற்றில் பெண்கள் குளிப்பதைப் பாருங்கள் என்று கூறி 26 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கெஜ்ரிவாலை விட டெல்லி முதல்வர் ரேகா குப்தா பரவாயில்லை, யமுனா ஜியை சுத்தம் செய்ய இலவச ஷாம்பு கலந்து விட்டுள்ளார்😜 pic.twitter.com/lTkmwuSfAH
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில் இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
டெல்லியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள் எனப் பரவும் வீடியோ, கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்தே ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இது குறித்து “News18 தமிழ்” ஊடகப் பக்கத்தில் கடந்த 2024 டிசம்பர் 10 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "மனித சுயநலம் மற்றும் மாசுபாடு காரணமாக பல புனித நதிகள் மாசுபடுகின்றன. குறிப்பாக தற்போது டெல்லியில் உள்ள யமுனை நதி மாசுபாட்டால் விஷ நுரையால் நிரம்பியுள்ளது. சத் பூஜையின்போது, யமுனா நதியின் நிலை மோசமடைந்து காணப்பட்டது. இந்த பூஜையின்போது, பக்தர்கள் நச்சு நுரை நிரம்பிய தண்ணீரின் கரையில் நின்று சூரிய கடவுளுக்கு பிரார்த்தனை செய்கிறார்கள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று “Asianetnewsenglish” யூடியூப் பக்கத்திலும் இதே வீடியோ கடந்த 2024 நவம்பரில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் நடைபெற்ற சம்பவத்தை, முதல்வர் ரேகா குப்தா ஆட்சியில் தற்போது நடைபெற்ற சம்பவம் என்று கூறி தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
முடிவு:
நம் தேடலில், டெல்லியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள் எனப் பரவும் வீடியோ, கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்தே ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.