யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2025 ஜூனில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அடுத்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்து'வைத் தொடங்கியது. அதன்படி மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்களை ஈரானில் இருந்து தனி விமானம் மூலம் அழைத்து வந்தபோது, எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.
பரவிய செய்தி
பாரத மண்ணை வணங்கிய முஸ்லீம்கள் ஈரானிலிருந்து மீட்ட மோடி | கண்ணீர் மல்க நன்றி

விரிவான விளக்கம்
ஈரானில் சிக்கிய முஸ்லிம்களை தற்போது பாதுகாப்பாக மீட்ட பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி ஸ்ரீ டிவி ஊடகத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டப்படி ஒரு இஸ்லாமிய பெண் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
"ஈரானில் சிக்கிய முஸ்லிம்களை பாதுகாப்பாக மீட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்"🇮🇳🔥
"ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்" என கோஷமிட்டு, பாரத மண்ணை வணங்கிய முஸ்லிம்கள்!#NarendraModi pic.twitter.com/mYWFIswQcE
உண்மை என்ன?
பரவி வரும் அந்த வீடியோவை, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது NDTV ஊடகத்தில், “Indian Evacuees Chant "Hindustan Zindabad" As 2nd Batch Returns From Iran” என்ற தலைப்பில் ஜூன் 21, 2025 அன்று பரவி வரும் வீடியோவில் உள்ள screenshot உடன் செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அடுத்து, அங்கு வான்வழிப் போர் தொடங்கியது. இந்நிலையில் இந்தியா 'ஆபரேஷன் சிந்து'வைத் தொடங்கியது. அதன்படி மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்களை ஈரானில் இருந்து இந்தியா ஒரு தனி விமானம் மூலம் அழைத்து வந்தது. அப்போது டெல்லி விமான நிலையம் முழுவதும் "இந்துஸ்தான் ஜிந்தாபாத்" என்ற கோஷங்கள் எதிரொலித்தன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் DD News ஊடகப்பக்கத்திலும், ஜூன் 23, 2025 அன்று பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதிலும் ஆப்ரேஷன்சிந்து திட்டத்தின் கீழ் ஈரானின் மஷ்ஹத் நகரிலிருந்து 285 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இதன் மூலம் ஈரானிலிருந்து மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,713ஆக உயர்ந்துள்ளது. 'இந்துஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழக்கமிட்டபடி வந்தவர்களை, மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா வரவேற்றார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதராங்களின் அடிப்படையில், கடந்த 2025 ஜூனில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அடுத்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்து'வைத் தொடங்கியது. அதன்படி மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்களை ஈரானில் இருந்து தனி விமானம் மூலம் அழைத்து வந்தபோது, எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இதை ஈரானில் சிக்கிய முஸ்லிம்களை தற்போது பாதுகாப்பாக மீட்ட பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.