யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் புகைப்படம் கடந்த 2018-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நடிகர் விஜய் உடல் நலம் விசாரிக்க சென்றபோது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
பக்கா பிளான்...
திமுக மீண்டும் ஆட்சியில் அமர ஓட்ட பிரிக்க இறக்கிவிடபட்டவன் தான் இவன்…

விரிவான விளக்கம்
நடிகரும், தவெக தலைவருமான விஜய், திமுக கட்சியில் மறைமுக கூட்டணியில் இருப்பதாகவும், ஓட்டை பிரிக்க தான் விஜய் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறி புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
பக்கா பிளான் 💯
திமுக மீண்டும் ஆட்சியில் அமர ஓட்ட பிரிக்க இறக்கிவிடபட்டவன் தான் இவன் pic.twitter.com/rAYsFi7Sal
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது Indiaglitz ஊடகத்தில் ஆகஸ்ட் 1,2018 அன்று பரவி வரும் புகைப்படத்துடன் "Thalapathy Vijay visits Karunanidhi at hospital" என்ற தலைப்பில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 5 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பல்வேறு மூத்த அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நடிகர் விஜய் மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் News Minute செய்தி ஊடகத்தில் "Actor Vijay calls upon ailing DMK stalwart Karunanidhi in hospital" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 1,2018 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நடிகர் விஜய் நேரில் சென்று விசாரித்தார் என்றும், அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் உடனிருந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் விஜய், தனது சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை என்றும், அவரது வருகையின் போது என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் புதிய தலைமுறை செய்தி ஊடகத்திலும் ஆகஸ்ட் 1,2018 அன்று, "Thalapathy Vijay at Kauvery Hospital! Meets DMK Chief Karunanidhi" என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் மருத்துமனைக்கு சென்று கருணாநிதி உடல் நிலை குறித்து ஸ்டாலினிடம் நடிகர் விஜய் விசாரித்தார் என்றும், கூட்டத்தை தவிர்க்க மருத்துவமனையின் பின்வாசல் வழியாக சென்றார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
எனவே, பரவி வரும் புகைப்படம் கடந்த 2018-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நடிகர் விஜய் உடல் நலம் விசாரிக்க சென்றபோது எடுக்கப்பட்டது. இதை தற்போது நடந்தது போல் தவறாகப் பரப்பி வருகின்றனர்.