யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ இடம்பெற்றுள்ள ராகுல் காந்தி, சோனியா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பெயர்கள் செய்திக்குறிப்புகளில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
'Epstein files-இல் ராகுல் காந்தி பெயர்..! வெளியான 'திடுக்' குறிப்புகள்' - தமிழ் ஜனம்

Epstein Files-ல் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் என காங்கிரஸ் கட்சியினர் பெயரும் வருகிறது, அப்ப இவர்களெல்லாம் பா*யல் குற்றவாளிகளா? அல்லது சம்பந்தப்பட்டவர்களா?

விரிவான விளக்கம்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற அமெரிக்க நிதி அதிபதி பாலியல் குற்றத்திற்காகவும், குழந்தைகள் உட்பட பல பெண்களை கடத்தி பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்தியதற்காகவும் தண்டனை விதிக்கப்பட்டவர். அவர் 2019ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவர் பல்வேறு நாடுகளின் பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்பில் இருந்தார் என்றும், பெண்களை குழந்தைகளைக் கடத்தி பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்தும் வகையில் எப்ஸ்டீன் செயல்பட்டு வந்தது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-க்கு தெரியும் என்று சொல்லபட்டது.
இதனால் இது குறித்து அமெரிக்க செனட் அவையில் நடந்த விவாதங்களைத் தொடர்ந்து ’எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டம் (Epstein Files Transparency Act)’ என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, எப்ஸ்டீன் சேமித்து வைத்திருந்த கோப்புகள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவை அடங்கிய கோப்புகள் எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) என்ற பெயரில் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டது. இதுவரை 3 மில்லயனுக்கும் மேற்பட்ட கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஒரு கோப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2017 இஸ்ரேல் பயணத்தின் போது அமெரிக்க அதிபருக்காக பாட்டு பாடி நடனம் ஆடினார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது இந்தியர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை தூண்டிவிட்டது.
இந்நிலையில், எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர் மட்டும் இடம்பெறவில்லை ராகும் காந்தியின் பெயரும் வெளியாகியிருக்கிறது என்று ‘தமிழ் ஜனம்’ செய்தித்தளம் பரப்பிவருகிறது. அதேபோல், சோனியா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் பெயரும் இடம்பெற்றிருப்பதாக பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
Epstein files-இல் ராகுல் காந்தி பெயர்..! வெளியான 'திடுக்' குறிப்புகள்#epsteinfiles #donaldtrump #pmmodi #epsteinemails #congress #rahulgandhi #tamiljanam #Janam360 #Janamexclusive #budget2026 #nirmalasitharaman #bjp #hraja #tamilisaisoundararajan #dmk #mkstalin… pic.twitter.com/Fw00xPljhk
Epstein Files-ல் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் என காங்கிரஸ் கட்சியினர் பெயரும் வருகிறது, அப்ப இவர்களெல்லாம் பா*யல் குற்றவாளிகளா? அல்லது சம்பந்தப்பட்டவர்களா?🖤❤️🤡 pic.twitter.com/f4TxmEddj0
உண்மை என்ன?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்து தேடினோம். சில இடங்களில் ராகுல் காந்தி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டோம்.
ஆனால், அவை அனைத்துமே ஜெஃப்ரி எப்ஸ்டீன், மற்றவர்களுக்கு அனுப்பிய செய்தித்தளங்களில் வெளியான செய்திகள்/கட்டுரைகள் ஆகியவற்றில் ராகுல் காந்தி குறித்து குறிப்பிடப்பட்டிருந்த செய்திக் குறிப்புகள் மட்டுமே. மற்றொரு கோப்பில் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டிருப்பது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அல்ல, ’Creditsights’ என்ற நிதி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரியும் ராகுல்காந்தி என்பவர் பற்றியதாகும்.

இதே போன்று சோனியா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் குறித்து அதில் குறிப்பிடப்பட்டிருப்பதும் செய்தித்தளங்களில் வெளியான செய்திகள்/கட்டுரைகள் ஆகியவற்றில் வெளியாகியிருந்த செய்திக் குறிப்புகள் மட்டுமே ஆகும்.
ஆனால், நரேந்திர மோடி குறித்து ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ வேறுவகையான தகவல்கள் வந்துள்ளன. குறிப்பாக ஜெஃப்ரி எப்ஸ்டீன்-க்கும் ஸ்டீவ் பேனன் என்ற அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவருக்கும் இடையில் நடந்த குறுஞ்செய்தி உரையாடல் வெளியாகியுள்ளது.

அதில், நரேந்திர மோடிக்கு ஆதரவாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் யாரும் இல்லை என்றும், ஆனால் அவர் சீனாவை எதிரியாக பார்க்கிறார், சீனாவை தடுக்க நினைக்கிறார் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ’மோடி ஸ்டீவ் பேனன் -னை சந்தித்தது பற்றியும் அவர்கள் சீனா பற்றி பேசியது’ பற்றியும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் அனில் அம்பானி ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சல் ஒன்றில் ‘இஸ்ரேல் பயணத்தின் போது அமெரிக்க அதிபருக்காக பாட்டு பாடி நடனம் ஆடினார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ இடம்பெற்றுள்ள ராகுல் காந்தி, சோனியா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பெயர்கள் செய்திக்குறிப்புகளில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. ஆனால் மோடியின் பெயர் அமெரிக்க அதிகாரிகள், அனில் அம்பானி ஆகியோருடன் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உரையாடும் போக்கில் குறிப்பிடப்பட்டதாகும். அதனால் அது வேறு வகையான முக்கியத்துவம் பெறுகிறது.
முடிவு:
எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைப் போலவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, சோனியா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் இடம்பெற்றுள்ளது என உண்மையை திரித்து தவறான செய்தியை வெளியிட்டுள்ளது ’தமிழ் ஜனம்’. இந்த தவறான செய்தியை பாஜக ஆதரவாளர்கள் உண்மையென சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.