யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் இருக்கும் பிற மாநில நகரங்களின் இரயில் நிலைய பெயர் பலகைகள் பயணிகள் வசதிக்காக தமிழில் எழுதப்படுகிறது.
பரவிய செய்தி
தமிழ்நாட்டில் உள்ள மலையாளம், தெலுங்கு; கேரளாவில் ஆந்திராவில் தமிழ் இல்லை;
இனவெறி கொள் தமிழா.

விரிவான விளக்கம்
திருத்தணி, பொள்ளாச்சி, பாலக்காடு, திருப்பதி ஆகிய இரயில் நிலையங்களின் பெயர் பலகைகளின் புகைப்படத்தை பகிர்ந்து, இதில் திருத்தணி, பொள்ளாச்சி ஆகிய தமிழ்நாட்டு நகரங்களில் தெலுங்கிலும் மலையாளத்திலும் பெயர் பலகைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் ஆந்திராவின் திருப்பதி மற்றும் கேரளாவின் பாலக்காடு ஆகிய நகரங்களில் இரயில் நிலைய பெயர் பலகைகளில் தமிழ் இல்லை என்று ‘நாம் தமிழர் கட்சி’யின் ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.
அதாவது, தமிழ்நாட்டில் உள்ள இரயில் நிலைய பெயர் பலகைகளில் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் உள்ளன; ஆனால் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள இரயில் நிலையங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது என்ற கண்ணோட்டத்தில் பரப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மலையாளம், தெலுங்கு
கேரளாவில் ஆந்திராவில் தமிழ் இல்லை
இனவெறி கொள் தமிழா🔥🔥🔥 pic.twitter.com/fNGkRq37LQ
உண்மை என்ன?
பொள்ளாச்சி நகரம் தமிழ்நாடு - கேரளா எல்லையோரத்தில் இருக்கிறது. அதேபோல், திருத்தணி தமிழ்நாடு - ஆந்திரா எல்லையோரத்தில் இருக்கும் நகரமாகும். இதனால் அவற்றின் இரயில் நிலைய பெயர் பலகைகளில் முறையே மலையாளத்திலும் தெலுங்கிலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் திருப்தியும் பாலக்காடும் தமிழ்நாடு எல்லையோரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கேரளாவிலும் ஆந்திராவிலும் தமிழ்நாடு எல்லையாரங்களில் உள்ள நகரங்களின் இரயில் நிலைய புகைப்படங்களை தேடினோம். அதில் திருத்தணிக்கு அருகில் உள்ள ‘நகரி’ என்ற நகரத்தில் இரயில் நிலைய பெயர் பலகை தமிழ் எழுதப்பட்டுள்ளதை காணமுடிந்தது.

அதேபோல், கேரளாவில் உள்ள ‘பாறைசாலா’ என்ற நகரம் பொள்ளாச்சி அருகிலும் ‘முதலமடை’ என்ற கேரள கிராமம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை அருகிலும் உள்ளது. இந்த ஊர்களின் இரயில் நிலைய பெயர் பலகைகளில் தமிழிலிலும் எழுதப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

இதிலிருந்து தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் இருக்கும் நகரங்களின் இரயில் நிலைய பெயர் பலகைகளில் பயணிகள் வசதிக்காக தமிழ் எழுதப்படுவதைக் காணமுடிகிறது.
முடிவு:
ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் உள்ள இரயில் நிலைய பெயர் பலகைகளில் தமிழ் மொழி எழுதப்படுவதில்லை என்று ‘நாம் தமிழர் கட்சி’யின் ஆதரவாளரால் இனவெறி கண்ணோட்டத்தில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.